/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
128 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைகிறது: கூடுதல் பணம் வசூலித்தால் நடவடிக்கை என எச்சரிக்கை
/
128 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைகிறது: கூடுதல் பணம் வசூலித்தால் நடவடிக்கை என எச்சரிக்கை
128 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைகிறது: கூடுதல் பணம் வசூலித்தால் நடவடிக்கை என எச்சரிக்கை
128 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைகிறது: கூடுதல் பணம் வசூலித்தால் நடவடிக்கை என எச்சரிக்கை
ADDED : மார் 12, 2025 06:49 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு சொர்ணவாரி மற்றும் சம்பா ஆகிய பருவத்தில், 50,000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதற்காக, கடந்தாண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 44 இடங்களில், தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து, 18,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டன.
தற்போது, நவரை பருவத்தில், மாவட்டம் முழுதும் ஐந்து ஒன்றியங்களில், 79,950 ஏக்கர் பரப்பளவில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் அறுவடை காலம் துவங்க உள்ளது.
அறுவடை செய்யும் நெல்லை, தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகம் முழுதுமாக கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, மாவட்டம் முழுதும், ஐந்து ஒன்றியங்களிலும், 95 இடங்களிலும், தேசிய நுகர்வோர் குழு கூட்டமைப்பு சார்பில், 33 இடங்கள் என, மொத்தம் 128 இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து கொள்முதல் செய்ய, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக, உத்திரமேரூர் ஒன்றியத்தில், 43 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைய உள்ளன.
நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு 125 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 86,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டன. இம்முறை, சாகுபடி கூடுதலாக நடந்துள்ளதால், கூடுதலாகவே கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களில் யாராவது கூடுதலாக பணம் வசூலித்தால், மண்டல மேலாளரிடம் புகாராக தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் எண், புகார் பெட்டி என அனைத்து விபரங்களும், நெல் கொள்முதல் நிலையங்களில் வைத்துள்ளோம்.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் சாலவாக்கம், மாம்பாக்கம் ஆகிய கிராமங்களில் இன்று நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிட்டுள்ளோம். விவசாயிகள் வழங்கும் சன்ன ரகத்திற்கு ஒரு குவிண்டாலுக்கு, 2,450 ரூபாயும், பொது ரகத்திற்கு ஒரு குவிண்டாலுக்கு 2,405 ரூபாயும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல் கொள்முதல் நிலையம் திறப்பது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு தற்காலிக கிடங்கு அமைத்து, மின் இணைப்பு கொடுக்க வேண்டும். துார்த்தும் இயந்திரம் இயக்க, மின் இணைப்புக்கு விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
கொள்முதல் நிலையங்களுக்கு எடை இயந்திரம், நெல் துார்த்தும் இயந்திரம் முறையாக கொடுக்க வேண்டும். வாடகைக்கு இயந்திரங்களை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்க கூடாது.
ஒவ்வொரு மூட்டைக்கும், 50 ரூபாய் வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மூட்டைகளை ஏற்ற, இறக்க, துார்த்துவதற்கு நுகர்ப்பொருள் வாணிப கழமே ஆட்களை நியமித்து அதற்கான செலவை ஏற்க வேண்டும். லாரி நேரத்துக்கு வர வேண்டும்.
அரசியல் கட்சியினர், தனி நபர்கள் தலையிட கூடாது. தேசிய நுகர்வோர் குழு கூட்டமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில், நாங்கள் நெல் மூட்டைகளை விற்பனை செய்துவிட்டு, சரியாக பணம் கிடைக்காமல் அவதிப்பட்டோம்.
இந்தாண்டு அதுபோல இல்லாமல், சரியான நேரத்தில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.