தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நகராட்சியாக தரம் உயர்ந்தும் ஸ்ரீபெரும்புதுார் மக்கள்... ஏமாற்றம்!: அடிப்படை வசதிகள்கூட பூர்த்தியாகாததால் அதிருப்தி

நகராட்சியாக தரம் உயர்ந்தும் ஸ்ரீபெரும்புதுார் மக்கள்... ஏமாற்றம்!: அடிப்படை வசதிகள்கூட பூர்த்தியாகாததால் அதிருப்தி

நகராட்சியாக தரம் உயர்ந்தும் ஸ்ரீபெரும்புதுார் மக்கள்... ஏமாற்றம்!: அடிப்படை வசதிகள்கூட பூர்த்தியாகாததால் அதிருப்தி


UPDATED : ஜூலை 27, 2026 02:50 AM

ADDED : ஜூலை 26, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2026 02:50 AM ADDED : ஜூலை 26, 2026 07:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதுார், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், பெயரளவில் மட்டுமே செயல்படுவதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், அடிப்படை வசதிகள்கூட பூர்த்தியாகாததால், அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியின் 15 வார்டுகளில், 90,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர் 19.39 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பகுதி, சென்னை பெருநகர வளர்ச்சியின் முக்கிய மையமாகவும், ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைந்துள்ள தொழில் நகரமாகவும் திகழ்கிறது.

இந்நிலையில், வருவாய் அடிப்படையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பேரூராட்சியிலிருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சி அந்தஸ்து கிடைத்ததால் கூடுதல் நிதி, மேம்பட்ட கட்டமைப்பு வசதிகள் மற்றும் விரைவான வளர்ச்சி கிடைக்கும் என பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதே மக்களின் ஆதங்கமாக உள்ளது.

சுகாதாரம் பாதிப்பு

தொழில் நகரமாக விளங்கும் ஸ்ரீபெரும்புதூரில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனால் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், நகராட்சியில் தேவையான அளவு தூய்மை பணியாளர்கள் இல்லாததால் குப்பை மேலாண்மை சவாலாக மாறியுள்ளது.

மொத்தம் 180 பணியிடங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், பாதிக்கும் குறைவான பணியாளர்களே தற்போது பணியில் உள்ளனர். இதனால் வீடுகளிலிருந்து குப்பை தரம் பிரித்து சேகரிக்கும் பணியில் சிரமம் ஏற்படுகிறது. பல இடங்களில் குப்பை கழிவுகள் சாலையோரங்களில் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு உருவாகி வருகிறது.

பராமரிப்பின்றி பூங்காக்கள்

ஒரு லட்சம் மக்களை நெருங்கும் நகரமாக இருந்தும், பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி வசதிகள் மிகவும் குறைவாக உள்ளன. நகராட்சிக்குட்பட்ட பல பூங்காக்கள் பராமரிப்பின்றி சீரழிந்துள்ளன. குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடவும், முதியோர் நடைபயிற்சி மேற்கொள்ளவும் ஏற்ற சூழல் இல்லாததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அவலநிலை

ஆன்மிக நகரின் அவலநிலை ராமானுஜரின் அவதார ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீபெரும்புதூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

ஆனால், நகரின் தற்போதைய நிலை பக்தர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பேருந்து நிலையத்தில் பராமரிப்பில்லாத கழிப்பறைகள், தரமற்ற குடிநீர் வசதி, குப்பைக் குவியல்கள் மற்றும் சேதமடைந்த சாலைகள் போன்றவை நகரின் முகவரியையே பாதிக்கும் வகையில் உள்ளது.

புதிய அரசிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத் துறையை முதல்வர் விஜய் நேரடியாக கவனித்து வருவதுடன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக தென்னரசு, இடம் பெற்றுள்ளார். இதனால், நகராட்சிக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, நீண்டகாலமாக நிலவி வரும் அடிப்படை வசதி பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

நகராட்சி நிர்வாகம் விளக்கம்

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் நந்தினி கூறியதாவது:

முதற்கட்டமாக 4.65 கோடி மதிப்பீட்டில் நகராட்சி சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

பூங்காக்களை மேம்படுத்த தேவையான நிதி தற்போது இல்லை. மேலும், துாய்மை பணிகளை வலுப்படுத்த கூடுதல் பணியாளர்கள் நியமிக்க நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய வணிக வளாகத்தில் கடைகள் அமைக்க குத்தகைதாரர்கள் போதிய ஆர்வம் காட்டாததால் பயன்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகள்
★ ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும்
★ சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்
★ நகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்களையும் புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
★ தெருக்கள் அனைத்திற்கும் பெயர் பலகைகள் அமைக்க வேண்டும்
★ பொதுமக்கள் வசதிக்கேற்ப கூடுதல் வரி வசூல் மையங்கள் அமைக்க வேண்டும்
★ பாதாள சாக்கடை பணிகளுக்காக சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்
★ சிவந்தாங்கல் பகுதியில் 2.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காய், கனி மற்றும் மலர் அங்காடி வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
★ துாய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்
★ நவீன காய்கறி மற்றும் இறைச்சி சந்தைகளை அமைக்க வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us