/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
ADDED : ஜூன் 17, 2024 03:30 AM

உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் விழா கடந்த மே 28ம் தேதி, கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தினமும் காலை, மாலை நேரங்களில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
கடந்த 7ம் தேதி, காலையில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. அப்போது, திரௌபதி அம்மனுக்கு அர்ச்சுனன் தாலி கட்டும் நிகழ்ச்சி மேள, தாளங்கள் முழங்க கோலாகலமாக நடந்தது.
அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் துாது, அபிமன்யு சண்டை, கர்ணன் மோட்சம் மற்றும் மகாபாரத சொற்பொழிவும், நாடகமும் தினசரி நடைபெற்று வந்தன.
இந்த விழாவின் நிறைவு நாளான நேற்று, காலை 11:00 மணிக்கு, 18ம் நாள் போரில் துரியோதனனை பீமன் வீழ்த்தி வெற்றி கண்ட படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
புராண கதைகளில் வரும் அர்ச்சுனன், பீமன் மற்றும் துரியோதனன் ஆகியோரின் வேடங்களை அணிந்து வந்த நாடக கலைஞர்கள், இதிகாச வரலாற்றை மக்கள் முன் நடித்துக் காட்டினர்.
பீமன் வேடமிட்ட கலைஞர், மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் பொம்மை மீது ஏறி அமர்ந்து தொடையில் பீமன் அடிப்பது போன்று, தத்துரூபமாக நடித்துக் காட்டினர். சாலவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.