/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீட்டணஞ்சேரி, காலீஸ்வரர் குளம் துார்வாரி பராமரிக்க எதிர்பார்ப்பு
/
சீட்டணஞ்சேரி, காலீஸ்வரர் குளம் துார்வாரி பராமரிக்க எதிர்பார்ப்பு
சீட்டணஞ்சேரி, காலீஸ்வரர் குளம் துார்வாரி பராமரிக்க எதிர்பார்ப்பு
சீட்டணஞ்சேரி, காலீஸ்வரர் குளம் துார்வாரி பராமரிக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 14, 2025 12:22 AM

சீட்டணஞ்சேரி:உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது சீட்டணஞ்சேரி கிராமம். இக்கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான சிவகாமி உடனுறை காலீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் நுழைவாயில் அடுத்த வலதுபுறத்தில் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இக்குளத்து நீரில் மூழ்கி நீராடிய பின்தான், கோவில் உள்ளே சுவாமி தரிசனம் செய்வது கடந்த ஆண்டுகளில் வழக்கத்தில் இருந்துள்ளது.
மேலும், கோவிலில் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இக்குளத்து நீர் பயன்பாடாக இருந்துள்ளது. இந்நிலையில், சில ஆண்டுகளாக இக்குளம் முறையான பராமரிப்பு இல்லாமல் துார்ந்து, மழைக் காலங்களில் தண்ணீர் சேகரமாகாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
கோவில் குளத்திற்கான நீர்வரத்து கால்வாய்களும் பராமரிப்பின்றி உள்ளதால், குளத்திற்கான நீர்வரத்து, கடந்த ஆண்டுகளில் பொய்த்து போன நிலைக்குள்ளானது.
இதனால் ஆண்டுதோறும், மழைக்காலத்தில் மட்டும் குளத்தின் பாதி அளவிற்கு தண்ணீர் தேக்கமாகி, அடுத்த சில நாட்களில் குளம் வறண்டு போகும் நிலை உள்ளது.
எனவே, சீட்டணஞ்சேரி காலீஸ்வரர் கோவில் குளத்தை துார் வாரி, வரத்து கால்வாய்களை பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.