ADDED : ஜூன் 06, 2026 08:32 PM
காஞ்சிபுரம், ஜூன் 7–
காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கான இலவச தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர்,இருங்காட்டுகோட்டை, ஒரகடம், படப்பை ஆகிய ஆறு தீயணைப்பு நிலையங்களிலும் நேற்று காலை இந்தச் சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்கியது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல் பாரி தலைமை தாங்கி பயிற்சியை தொடக்கி வைத்தார். பயிற்சி நிலைய தீயணைப்பு அலுவலர் இந்திரா வரவேற்றார். நிலைய தீயணைப்பு அலுவலர் பிரபாகர் பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காட்டினார்.
பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் அடிப்படை தீத்தடுப்பு, தீ விபத்துகள் ஏற்படும் விதம் மற்றும் அதைத் தடுக்கும் முறைகள்,முதலுதவி நடவடிக்கைகள், ஆரம்ப நிலையிலேயே தீயை விரைவாக அணைக்கும் நுட்பங்கள், தீயணைப்புத் துறையில் பயன்படுத்தப்படும் நவீன கருவிகளின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்த நேரடி செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.
அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல இடங்களில் தீத்தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவசர காலங்களில் அவற்றை எவ்வாறு இயக்குவது என்று பலருக்குத் தெரிவதில்லை என்பதே யதார்த்தம்.
இதுபோன்ற சூழலில், தீயணைப்புத் துறை நடத்திய இந்த விழிப்புணர்வு முகாம் மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், அதிகாரிகள் தரப்பில் இதற்குப் போதிய அளவில் விளம்பரம் செய்யப்படாததால், நேற்று பொதுமக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பங்கேற்றனர்.
