sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆளவந்தார் அறக்கட்டளை இடம் மீட்பதில் இழுபறி ஆக்கிரமிப்பை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு

/

ஆளவந்தார் அறக்கட்டளை இடம் மீட்பதில் இழுபறி ஆக்கிரமிப்பை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு

ஆளவந்தார் அறக்கட்டளை இடம் மீட்பதில் இழுபறி ஆக்கிரமிப்பை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு

ஆளவந்தார் அறக்கட்டளை இடம் மீட்பதில் இழுபறி ஆக்கிரமிப்பை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு


ADDED : ஜூன் 08, 2024 04:43 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம் : ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், மாமல்லபுரத்தில் நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளை இயங்குகிறது. அதற்கு சொந்தமாக, கடலோர பகுதிகளில் 1,054 ஏக்கர் நிலம் உள்ளது.

பட்டிபுலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிலத்தை, சமூக விரோதிகள் போலி ஆவணங்கள் வாயிலாக அபகரிக்கவும், பிறரிடம் விற்கவும் தொடர்ந்து முயற்சி நடக்கிறது.

இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் பலர் தொடர்ந்த வழக்குகள், விசாரணை முடிவில் தள்ளுபடி செய்யப்பட்டன.

தடை


இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், அறக்கட்டளை நிலத்தை அளவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, வருவாய்த் துறையினர் முழுமையாக அளவிட்டு, இடத்தின் பரப்பு, அங்குள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தனர்.

அதன்பின், நீதிமன்றம் பரிசீலித்து, ஆளவந்தார் அறக்கட்டளை இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, இடத்தை மீட்க அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அதே துறையின் இணை ஆணையர் நீதிமன்றத்தில், அத்துறையினர், 78ம் பிரிவின்கீழ், ஆக்கிரமிப்பு அகற்றல் உத்தரவை பெற்று, கடந்த 2022லிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

முதலில் தனியார் ஆக்கிரமித்து கட்டிய சுற்றுச்சுவரை இடித்து, அணுகுபாதைக்கு ஆக்கிரமித்த பகுதியையும் மீட்டனர்.

இச்சூழலில், வழக்குதாரர், அறக்கட்டளை நில மீட்பு முயற்சியில், முறையான நடவடிக்கை இல்லை எனக்கோரி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

எனவே, கடந்த ஆண்டு, பட்டிபுலம் மீனவர் பகுதியை ஒட்டி, அறக்கட்டளைக்கு சொந்தமான, 34 சென்ட் இடத்தில் கட்டப்பட்டுள்ள, 18 வீடுகளை அகற்ற இரண்டு முறை முயன்றனர்.

அப்பகுதி மீனவர்கள் எதிர்த்து, நீதிமன்றம் வாயிலாக தீர்வு காண முயற்சிப்பதாக கூறியதால், மீட்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டது. அதனால், அங்கே ஆக்கிரமிப்பு அகற்றும் முயற்சி தடைபட்டு, அதே நிலையே நீடிக்கிறது.

முற்றுகை


இந்நிலையில், நெம்மேலி ஊராட்சி, சூலேரிக்காடு மீனவர் பகுதியில் உள்ள அறக்கட்டளை இடத்தை, இரண்டு மாதங்களுக்கு முன், சப் - கலெக்டர் நாராயணசர்மா பார்வையிட்டு, ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தினார். இந்நில மீட்பு, அவமதிப்பு வழக்கு விசாரணை, வரும் 10ம் தேதி நடக்கவுள்ளது.

எனவே, உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், பாஸ்கரன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், சக்திவேல் உள்ளிட்ட செயல் அலுவலர்கள், திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி முன்னிலையில், நேற்று நில மீட்பிற்கு முயன்றனர்.

மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி., ரவி அபிராம், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், நடராஜன் மேற்பார்வையில், போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

சென்னை பகுதி தனியார் ஒருவர், அறக்கட்டளையின் 272/2 புல எண்ணில், 20 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த, இறால் குஞ்சு பொரிப்பகத்திற்கு, 'சீல்' வைத்து, அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த இடத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் என, அத்துறையினர் தெரிவித்தனர்.

அடுத்து, அறக்கட்டளையின் 272/4சி புல எண்ணில் 38 வீடுகள் மற்றும் 272/7 புல எண்ணில் ஒரு வீடு என, மீனவர்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்தனர்.

அவற்றை அகற்றுவது குறித்த நீதிமன்ற உத்தரவை, மீனவர்களிடம் விளக்கிய அதிகாரிகள், வீடுகளுக்கு சீல் வைக்க முயன்றனர். ஆனால், அவர்களை நுழையவிடாமல் தடுத்த மீனவர்கள், முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

சுனாமி பாதிப்பைத் தொடர்ந்து, கலெக்டர் அனுமதியுடன் கட்டப்பட்ட வீடுகளை அகற்ற விடமாட்டோம் என, அதிகாரிகளிடம் வாதிட்டு, அகற்ற வந்த பொக்லைன் இயந்திரத்தை தடுத்து நிறுத்தினர்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு, பலமுறை அறிவிப்பாணை, கால அவகாசம் என அளித்தும், அவர்கள் நீதிமன்றத்தை அணுகாமல் அலட்சியப்படுத்தியதாக சுட்டிக்காட்டினர்.

மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனா, மீனவர்கள் நிலை கருதி, நடவடிக்கையை கைவிட வலியுறுத்தினார். நீதிமன்ற வழக்கு விவகாரம் குறித்து, அவரிடம் அதிகாரிகள் விளக்கினர். அப்போது, நீதிமன்றத்தில் முறையிடுவதாக, மீனவர்கள் உறுதியளித்தனர்.

அதன்பின், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க, ஒரே வீட்டிற்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால், காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரை, அப்பகுதியில் பதற்றம் நீடித்தது.

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன்படியே, ஆக்கிரமிப்பில் உள்ள அறக்கட்டளை நிலத்தை மீட்க முயற்சித்து வருகிறோம். மீனவர்கள் எதிர்ப்பை, நீதிமன்றத்தில் பதிவு செய்வோம். வட்டார வளர்ச்சி நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு, அறநிலையத்துறை ஆணையரிடம், அந்நிர்வாகம் முறையிட்டுள்ளது.

- எம்.சக்திவேல்,

செயல் அலுவலர், நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளை, மாமல்லபுரம்.

மொத்தம் 13.6 ஏக்கர் ஆக்கிரமிப்பு

அறக்கட்டளையின் மொத்த இடம் 1,250 ஏக்கர். அவற்றில், கிழக்கு கடற்கரை சாலைக்கு, 120 ஏக்கர்; மீனவர் பகுதிகளின் சாலைகளுக்கு என, அறக்கட்டளை நிலத்தை, அரசு கையகப்படுத்தியது நீங்கலாக, தற்போது 1,054 ஏக்கர் நிலம் உள்ளது.அவற்றில், பட்டிபுலம் பகுதியில் 1.92 ஏக்கர், சூலேரிக்காடு பகுதியில் 1.79 ஏக்கர், புதிய எடையூர் பகுதியில் 0.56 ஏக்கர் என, ஆக்கிரமித்து அப்பகுதி மீனவர்கள் வீடு கட்டியுள்ளனர்.திருப்போரூர் வட்டார வளர்ச்சி நிர்வாகத்தின் சார்பில், நெம்மேலியில் சமுதாயக்கூடம், கிணறு, சிறுவர் பூங்கா, கழிப்பறை, மயானம் உள்ளிட்டவை, 4.91 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.பட்டிபுலம் ஊராட்சியில், குடிநீர் கிணறு, பாதை உள்ளிட்டவற்றுக்காக, 2.84 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சாலவான்குப்பம் ஊராட்சியில், சாலை, மயானம் உள்ளிட்டவற்றுக்காக, 1.58 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.அந்த வகையில், மொத்த ஆக்கிரமிப்பு இடம், 13.6 ஏக்கர் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us