/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் உணவு பொருள் விலை தாறுமாறு..
/
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் உணவு பொருள் விலை தாறுமாறு..
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் உணவு பொருள் விலை தாறுமாறு..
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் உணவு பொருள் விலை தாறுமாறு..
ADDED : மே 27, 2024 07:21 AM
கூடுவாஞ்சேரி: வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து முனையம் உள்ளது. இங்கு, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணியர், தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
பேருந்து முனையத்தில், ஆரம்பத்தில் போதிய உணவகங்கள் செயல்படவில்லை. தற்போதும், பயணியர் வருகைக்கேற்ப போதிய உணவகங்கள் இல்லாத நிலையில், இருக்கும் சொற்ப உணவகங்களில், சாமானியர்கள் வாங்கி சாப்பிடும் அளவுக்கு உணவுகளின் விலை இல்லை.
ஒரு இட்லியின் விலை 20 ரூபாய், ஒரு வடையின் விலை 20 ரூபாய், ஒரு டீயின் விலை 25 ரூபாய் என உள்ளதாக, பயணியர் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள ஹோட்டல்களில், உணவுப்பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. மேலும், ஹோட்டல்களில் உணவு வாங்கினால், அங்கு தண்ணீர் கொடுப்பதில்லை. அதற்கு பதிலாக, 1 லிட்டர் வாட்டர் பாட்டில் வாங்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.
புதிதாக திறக்கப்பட்ட ஒரு உணவகத்தில், குறைந்தது நான்கு இட்லி, ஒரு வடை மட்டுமே வழங்கப்படுகிறது. அதற்கு 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதற்கு குறைந்து உணவு வழங்கப்படுவதில்லை.
அந்த உணவகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபோது, 20 ரூபாய் கொடுத்து, 1 லிட்டர் வாட்டர் பாட்டில் வாங்கும்படி சொல்கின்றனர்.
திருச்சிக்கு செல்வதற்கான பேருந்து கட்டணத்தைவிட, பேருந்து முனையத்தில் சாப்பிடுவதற்கு, அதிகமான தொகை செலவாகிறது.
பேருந்து முனையத்தின் அடித்தளத்தில், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான கட்டண வாகன நிறுத்தம் உள்ளது. இங்கு, எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளன.
பேருந்து வளாக 'பார்க்கிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்தி, வெளியூர் சென்று திரும்பி வந்து எடுத்தால், வாகனங்கள் இயங்குவதில்லை. வாகனத்தின் ஒயர்கள் எலிகளால் துண்டிக்கப்பட்டு, பாழாகி விடுகின்றன.
வெளியில் இருந்து மெக்கானிக் அழைத்து வந்து, வாகனங்களை சரிசெய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், கூடுதல் செலவாகிறது.
அனைத்து தரப்பு மக்களும் சாப்பிடும் வகையில், குறைந்த கட்டணத்தில் உணவுப் பொருட்கள் வழங்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'அம்மா' உணவகம் போல், அரசு உணவகம் ஒன்றை குறைந்த கட்டணத்தில் கிளாம்பாக்கம் வரும் பயணியருக்காக, பிரத்யேகமாக அமைக்க, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

