ADDED : ஆக 03, 2026 08:33 PM
* 102ல் 46 அதிகாரிகளின்றி காஞ்சி மாநகராட்சி நிர்வாகம்... * 4 மண்டலத்திலும் உதவி கமிஷனர்கள் பணியிடம் காலி * வரி வருவாயில் பாதிப்பு; திட்டப் பணிகளும் சுணக்கம்
காஞ்சிபுரம், ஆக. 4-–
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் உதவி கமிஷனர்கள் இல்லாததால், நிர்வாக பணிகள் முடங்கியுள்ளன. மாநகராட்சியி்ல, 102 பணியிடங்களில், பொறியாளர், சுகாதார அலுவலர், உதவி கமிஷனர்கள், நகரமைப்பு அலுவலர், வரைவாளர், உதவி பொறியாளர் என, 46 பணி இடங்கள் காலியாக உள்ளதால், கோப்புகள் எல்லாம் தேங்கி, மாநகராட்சிக்கான வரி வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, திட்டப் பணிகளும் முடங்கியுள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், நகரமைப்பு பிரிவு, சுகாதார பிரிவு, பொறியியல் பிரிவு என, பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. காஞ்சிபுரம் நகராட்சி 2021ம் ஆண்டில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நான்கு மண்டலங்கள், 51 வார்டுகளின் கீழ், 2.5 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
ஒவ்வொரு மண்டலத்திற்கு தலா ஒரு உதவி கமிஷனர்கள் இருக்க வேண்டும். ஆனால், நான்கு மண்டலங்களுக்கும் உதவி கமிஷனர்கள் இல்லை. ஆறு மாதங்களாக காலியாக இருந்த உதவி கமிஷனர் பணியிடத்திற்கு, மோகனசுந்தரி என்பவரை கடந்த ஜூனில் நகராட்சி நிர்வாகம் நியமித்தது. ஆனால், அவர் பொறுப்பேற்கவில்லை.
அடுத்து, கண்ணன் என்பவர் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் பொறுப்பேற்றவர் திடீரென விடுப்பில் சென்றதால், மாநகராட்சி கண்காணிப்பாளர், வரதராஜன் தற்போது கூடுதல் பொறுப்பாக, வருவாய் பிரிவு உதவி கமிஷனர் பணியை கவனிக்கிறார்.
உதவி கமிஷனரின் ஒப்புதல் பெற வேண்டிய நூற்றுக்கணக்கான கோப்புகள் நிலுவையில் உள்ளதால், வரி தொடர்பான விண்ணப்பங்களை அளித்துள்ள நகர மக்கள், தினமும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். புதிய கட்டடங்களுக்கு வரி நிர்ணயம், வரி பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளும் முடங்கியுள்ளன.
குறிப்பாக, வருவாய் பிரிவுக்கான உதவி கமிஷனர் இல்லாதது, ஏராளமான வரி விதிப்பு கோப்புகள் தேக்கமடைவதாக, நகர மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய சுகாதார அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. இங்கு பணியாற்றி வந்த அருள்நம்பி என்பவர், சில மாதங்களுக்கு முன், சென்னைக்கு மாற்றப்பட்டார்.
அன்று முதல் மாநகராட்சி சுகாதார அலுவலர் பணிக்கு அதிகாரி யாரும் நியமிக்கப்படவில்லை. திடக்கழிவு மேலாண்மை, ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்காணிப்பது, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைப்பது போன்ற பணிகள் அதிகாரி இல்லாததால் சுணக்கம் அடைந்துள்ளது.
அதேபோல, விதிமீறல் கட்டடங்களை தடுப்பது, விதிமீறல் பேனர்களை அகற்றுவது, அபராதம் விதிப்பது போன்ற பல்வேறு பணிகளுக்கு, நகரமைப்பு அலுவலர்தான் பொறுப்பு. ஆனால், நகரமைப்பு அலுவலர் இல்லாமல், நகரமைப்பு ஆய்வாளர் மூலமாகவே அனைத்து பணிகளும் நடக்கின்றன.
தொல்லியல் துறை இடங்களில் முளைத்திருக்கும் கட்டடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பணிக்கும் அதிகாரி இல்லாதது, நகரின் விதிமீறல் கட்டடங்கள் மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.
அதேபோல, மாநகராட்சிக்கு பொறியாளர், சுகாதார அலுவலர், வரைவாளர், நகரமைப்பு அலுவலர் என, முக்கிய பதவியிடங்கள் காலியாக இருப்பதால், வளர்ச்சி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், வங்கிக் கடன் பெறுதல், சொத்து பதிவு, கட்டட அனுமதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் தாமதமடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
காலி பணியிடங்களால் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதை உணர்ந்து, வருவாய் துறையில் முழு நேர உதவி கமிஷனர் மட்டுமின்றி, பிற பணியிடங்களையும் நியமித்து, மாநகராட்சி சுறுசுறுப்புடன் செயல்பட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நகர மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் வினோத்திடம் கேட்டபோது, ‘‘நீதிமன்ற வழக்குகள் காரணமாக பல்வேறு பணியிடங்களுக்கு, அதிகாரிகள் பொறுப்பேற்க முடியாமல் உள்ளது. சில பணியிடங்களுக்கு, பதவி உயர்வில் வர வேண்டும். காலி பணியிடங்கள் பற்றி, துறை மேலிடத்திற்கு தெரிவித்துள்ளோம். விரைவில், காலி பணியிடங்களை பூர்த்தி செய்வார்கள்,’’ என்றார்.
