/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொலை முதல் பல குற்றங்களில் சிறார் கைவரிசை படிப்பை நிறுத்தி போதையில் பாதை மாறும் அவலம்
/
கொலை முதல் பல குற்றங்களில் சிறார் கைவரிசை படிப்பை நிறுத்தி போதையில் பாதை மாறும் அவலம்
கொலை முதல் பல குற்றங்களில் சிறார் கைவரிசை படிப்பை நிறுத்தி போதையில் பாதை மாறும் அவலம்
கொலை முதல் பல குற்றங்களில் சிறார் கைவரிசை படிப்பை நிறுத்தி போதையில் பாதை மாறும் அவலம்
ADDED : மே 11, 2024 11:20 PM
சென்னை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500க்கும் மேற்பட்ட சிறார்கள் கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி அளவிலேயே கஞ்சா, போதை மாத்திரை எளிதாக கிடைப்பதால், அதற்கு அடிமையாகி பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டு இளம்வயது குற்றவாளிகளாக மாறும் அவல நிலை நீடித்து வருகிறது.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விபரங்களின்படி, 2022ல் தமிழகத்தில் 3,200க்கும் மேற்பட்ட இளம் வயது குற்றவாளிகள் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டுதல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதில், சென்னையில் மட்டும், இளம்வயதினர் 521 பேர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் திட்டமிட்டே, போதைக்கு திருப்பி குற்றச்செயலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறிப்பாக கொலை வழக்குகளில் சிறார்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது.
ஒரு நாளில்...
சென்னையில் கடந்த 10ம் தேதி ஒரே நாளில் நடந்த சம்பவங்களில் முக்கிய குற்றவாளிகளாக சிறார்கள் பிடிபட்டு உள்ளனர்.
↓திருவான்மியூரில் போதை பழக்கத்தையும், பெண்களுடன் உல்லாசமாக இருந்ததையும், பெற்றோரிடம் போட்டுக் கொடுத்த பக்கத்து வீட்டில் வசிக்கும் 58 வயது பெண்ணை, 17 வயது சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து கழுத்து அறுத்து கொன்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது
↓செய்யூரில், ஆடு திருடியதை கண்டித்த, 52 வயது பெரியப்பாவை, 16 வயது சிறுவன் சரமாரியாக தாக்கி கொலை செய்தான்
↓பெரும்பாக்கத்தில் குற்றச்செயலுக்காக நாட்டு வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்து ஆறு பேரில் ஒருவன் சிறுவன் மற்றவர்கள் 21 முதல் 23 வயதுடையவர்கள்
↓புளியந்தோப்பு பகுதியில் வீண் தகராறு செய்து ஒருவரை கத்தியால் தாக்கிய வழக்கில், இரண்டு சிறுவர்களை போலீசார் பிடித்தனர்
↓சில நாட்களுக்கு முன் அதிகாலை 3:00 மணியளவில் மாதவரம் செல்ல 'கால் டாக்சி' புக் செய்து, அதில் பயணித்த கொடுங்கையூர் சிறுவர்கள் மூவர், ஓட்டுனரை தாக்கி வழிப்பறி செய்த சம்பவமும் அதிர்வலையை ஏற்படுத்தியது
பின்னணி
பள்ளி அளவிலேயே சிறார்களை பணம், ஆடம்பரம், உல்லாச ஆசைக்காட்டி, போதை பழக்கத்திற்கு உட்படுத்தி பெரும் புள்ளிகள், தங்கள் ஆதாயத்துக்காக மூளைச்சலவை செய்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுத்துவது, பல வழக்குகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வழக்கில் சிக்கினாலும், சிறார் என்பதால், குறைந்த பட்ச தண்டனையுடன் தப்பலாம் என்றும் அவர்களுக்கு ஆசை காட்டப்படுகிறது.
அந்த வகையில், சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், குற்றச்சம்பவங்களில் இளஞ்சிறார்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இளம் சிறார்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதற்கும், போதைக்கு அடிமையாவதற்கும் கல்வியறிவு போதியளவில் இல்லாதது காரணம் என, தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அருகாமையில், கஞ்சா, போதை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரை, குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்டவை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை தடுக்க, உணவு பாதுகாப்பு துறை, காவல் துறை இணைந்து குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினரின் செயல்பாடு முறையாக இல்லாததால், பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட போதை பழக்கத்தை தடுக்க முடியவில்லை.
இடைநிற்றல் அதிகரிப்பு
இதனால், சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2023 - 24ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்தவர்களில், 154 பேர் பொது தேர்வு எழுதாமல் இடைநிற்றலில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, 485 இளஞ்சிறார் குற்றவாளிகளிடம் நடத்திய ஆய்வில், 20 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்களாகவும், 37 சதவீதம் பேர் தொடக்க கல்வியோடு படிப்பை கைவிட்டவர்களாகவும், 43 சதவீதம் பேர் நடுநிலை கல்வியோடு படிப்புக்கு முழுக்குப்போட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
பள்ளிப்படிப்பை கைவிட்டு, குற்றங்களில் ஈடுபடும் சிறாரில், 58 சதவீதம் பேர் பெற்றோருடன் வசிக்கின்றனர். அதே நேரம், 15 சதவீதம் பேர் பராமரிப்பாளருடனும், 27 சதவீதம் பேர் வீடற்றவர்களாக, தன்னிச்சையாக வாழ்க்கையை நகர்த்துவோராகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்களில், 8 சதவீதம் பேர் 12 வயதுக்குள்ளும், 22 சதவீதம் பேர் 12 முதல் 16 வயதுக்குள்ளும், 70 சதவீதம் பேர் 16 வயது முதல் 18 வயதுக்குள்ளும் உள்ளவர்கள்.
இளஞ்சிறார்கள் குற்றத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், நல்வழிப்படுத்தும் விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்கிறது. சென்னையில் 112 காவலர் சிறார் மன்றங்கள் இயங்கி வருகின்றன. மன்றங்களில் உள்ள சிறார்களை ஊக்கப்படுத்தும் விதமாக, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கண்ணகி நகரில் காவல் துறையுடன் இணைந்து தனியார் நிறுவனம் அங்குள்ள சிறுவர்களுக்கென, பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டும், பள்ளிகள் திறந்த உடன், அருகே உள்ள காவல் நிலைய ஆய்வாளர் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
-- சென்னை காவல் துறை
- நமது நிருபர் -