/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குருவன்மேடு மேம்பால பணி விறுவிறு
/
குருவன்மேடு மேம்பால பணி விறுவிறு
ADDED : மே 11, 2024 11:37 PM

குருவன்மேடு:குருவன்மேடு -- ரெட்டிபாளையம் இடையே உயர்மட்ட பாலம் கட்ட, 'நபார்டு' திட்டத்தில், 4.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் கடந்தாண்டு துவக்கப்பட்டன. இதனால், 50 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
செங்கல்பட்டு அடுத்த பாலுார் -- வடக்குபட்டு சாலையில், குருவன்மேடு -- ரெட்டிபாளையம் இடையே தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.
20 கிராமங்கள்
இந்த வழியாக குருவன்மேடு, பாலுார், ரெட்டிபாளையம், வடக்குபட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களின் அன்றாட தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.
குறிப்பாக, குருவன்மேடு கிராம வாசிகள் அரசு மருத்துவ கல்லுாரி, கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், பாலுார் காவல் நிலையம், பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர் அத்தியாவசிய மற்றும் பல்வேறு தேவைகளுக்கு செங்கல்பட்டு சென்று வருகின்றனர்.
அதேபோல கொளத்தாஞ்சேரி, கரும்பாக்கம், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இச்சாலை வழியே செல்கின்றனர்.
மழைக்காலங்களில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த தென்னேரி ஏரி உபரிநீர், குருவன்மேடு தரைப்பாலத்தை மூழ்கடித்து செங்கல்பட்டு நீஞ்சல் மடுவிற்கு செல்லும். அங்கிருந்து, பாலாறு மற்றும் பொன்விளைந்தகளத்துார் ஏரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தரைப்பாலம் முழுதும் மூழ்குவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, குருவன்மேடு கிராம மக்கள் வீடுகளில் முடக்கும் நிலை ஏற்பட்டு வந்தது.
அப்போது, பள்ளி கல்லுாரி மாணவ - மாணவியர், அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோர், வடக்குபட்டு வழியாக சிங்கபெருமாள் கோவில் வழியாக செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தொடர்ந்து மனு
மேலும், கால்நடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என, இப்பகுதி வாசிகள் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கும், கலெக்டருக்கும் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழிலும் தொடர்ந்து செய்தி வெளியானது. இதையடுத்து, 2017ம் ஆண்டு இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க, 2.50 கோடி ரூபாய் மதிப்பீடு செய்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பினர்.
ஆலோசனை
கடந்த 2022ம் ஆண்டு பெய்த கனமழையில் தரைப்பாலத்தை வெள்ள நீர் மூழ்கடித்து சென்றது. இதை, அப்போதைய செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் நேரடியாக ஆய்வு செய்தார்.
அதன்பின், ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து, உயர்மட்ட பாலம் அமைக்க, 'நபார்டு' திட்டத்தில், 4.57 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது. கடந்தாண்டு, 'டெண்டர்' விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. வேகமாக நடைபெற்ற பணிகள், மழை காலங்களில் மட்டும் ஒரு மாதம் நிறுத்தப்பட்டன.
ஒரு மாதத்தில் நிறைவு
தண்ணீரின் வேகம் குறைந்ததும் மீண்டும் பணிகள் துவங்கின. தற்போது, 95 சதவீதம் பணிகள் முடிவடைந்து, இம்மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் பணிகள் நிறைவடைய உள்ளன.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்த உயர்மட்ட பாலம் 12 மீட்டர் அகலமும், 62.50 மீட்டர் நீளமும் உடையது. பாலத்தின் இருபுறமும் 93 மீட்டர் துாரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட உள்ளது.
தற்போது, 95 சதவீத பணிகள் நிறைவடைந்தன. சோதனை முறையில் கனரக வாகனங்கள் உயர்மட்ட பாலத்தின் மீது இயக்கப்பட்ட பின், பாலத்தின் மீது தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் அனைத்து பணிகளும் நிறைவு பெறும்.
சுற்றியுள்ள கிராம மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, உயர்மட்ட பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைந்து முடித்த அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்தின்க்கும் நன்றி. இனிமேல், 20 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருக்காது.
த.காவேரி,
ஊராட்சி தலைவர், குருவன்மேடு.