/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலை மீடியனை உடைத்து திரும்பும் பாதை அமைப்பு
/
நெடுஞ்சாலை மீடியனை உடைத்து திரும்பும் பாதை அமைப்பு
நெடுஞ்சாலை மீடியனை உடைத்து திரும்பும் பாதை அமைப்பு
நெடுஞ்சாலை மீடியனை உடைத்து திரும்பும் பாதை அமைப்பு
ADDED : மார் 05, 2025 01:04 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, வேடப்பாளையம் பகுதியில் புக்கத்துறை -- வந்தவாசி சாலை உள்ளது. இருவழிச் சாலையாக இருந்த இச்சாலை, இரண்டு ஆண்டுக்கு முன் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
சாலையின் நடுவே மீடியன் அமைத்து, அரளி செடிகள் நடப்பட்டு நெடுஞ்சாலைத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேடபாளையத்தில் உள்ள இச்சாலையோரத்தில் வட்டார வேளாண்மை அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த அலுவலகங்களுக்கு, உத்திரமேரூரை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் விவசாய இடுப்பொருட்களை பெறவும், வேளாண் விளை பொருட்களை விற்கவும், டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர்.
அப்போது, நெடுஞ்சாலையில் உள்ள மீடியன் நடுவே, திரும்பும் பாதை இல்லாததால், ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டி இருந்தது.
மேலும், சாலையின் நடுவே திரும்பும் பாதை இல்லாததால், அனைத்து வாகனங்களும் எதிர்திசையில் வரவேண்டிய சூழல் இருந்தது. இதனால், அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வந்தது.
வேடப்பாளையம் பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே, மீடியனை அகற்றி திரும்பும் பாதை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது, நெடுஞ்சாலைத் துறையினர் மீடியனை இடித்து, வாகனங்கள் செல்வதற்கு ஏற்றதாக, திரும்பும் பாதை அமைத்து உள்ளனர். இதைப் பயன்படுத்தி, விவசாயிகள் வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கும் எந்தவித தடையும் இன்றி வந்து செல்கின்றனர்.