ADDED : ஜூலை 22, 2026 08:02 PM
* நிதி முறைகேட்டில் ஈடுபட்ட 436 ஊராட்சிகளுக்கு... * மூன்று மாவட்டங்களில் ஆய்வு பணிகள் தொடக்கம் * ஊரக வளர்ச்சி துறை உத்தரவால் அதிகாரிகள் கலக்கம்
காஞ்சிபுரம், ஜூலை 23–
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, 436 ஊராட்சி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஊரக வளர்ச்சி துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான ஆய்வு பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளதால், ஊராட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகள்; செங்கல்பட்டு மாவட்டத்தில், 359 ஊராட்சிகள்; திருவள்ளூர் மாவட்டத்தில், 528 ஊராட்சிகள் என, மொத்தம் 1,159 ஊராட்சிகள் உள்ளன.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருக்கும் ஊராட்சிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலும், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகள் அந்தந்த தனி அலுவலர் கட்டுப்பாட்டிலும், இயங்கி வருகின்றன.
இந்த ஊராட்சிகளில், மத்திய நிதி குழு மானியம், மாநில நிதிக் குழு மானியம், ஊராட்சிகள் பொது நிதி உள்ளிட்ட பல்வேறு வகையில் நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்த நிதி, குடிநீர் வினியோகம் செய்தல் மற்றும் பழுது பார்த்தல், தெரு விளக்கு பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு செலவிடப்படுகின்றன.
உள்ளாட்சி நிர்வாகங்கள், 10,000 ரூபாய்க்குள் செலவு செய்தால், ரசீது வைத்து பணம் எடுக்கலாம். 10,000 ரூபாய்க்கு மேல் செலவு என்றால், முறையாக டெண்டர் விட்டு வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும் என, ஊரக உள்ளாட்சிகள் நிர்வாக வழி காட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், சில ஊராட்சி நிர்வாகங்களில், அளவுக்கு அதிகமாகவும், வரைமுறை படுத்தப்பட்ட செலவினங்களுக்கு உள்ளேயும் செலவிட்டுள்ளனர். ஒரு சிலர் அரசாணை எண்.238-ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை.
பணி பதிவேடு பராமரிக்கப்படாதது, தொழில்நுட்ப அனுமதி இல்லாமல் பணிகள் செய்தது, ஜி.பி.எஸ்., விபரங்கள்கூடிய புகைப்படங்கள் இணைக்காமல் இருப்பது, புதிய பொருட்கள் இருப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு விதமான முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதற்கு காரணமானவர்கள், உடந்தையாக இருந்த ஊரக உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள் மீது, அந்தந்த கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இந்த அறிக்கையின்படி, அரசாணை பின்பற்றாத ஊராட்சிகளில் செலவினம் செய்த ஊராட்சி செயலர், தலைவர், துணை தலைவர் ஆகியோர் மீதும்; தனி அலுவலர் கட்டுப்பாட்டில் செயல்படும் ஊரக உள்ளாட்சி நிர்வாகங்களில், ஊராட்சி செயலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என, மூன்று மாவட்டங்களில், 436 ஊராட்சிகளில் தெரு விளக்குகள் பராமரிப்பு செலவுக்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளன.
குடிநீர் பணிகளுக்கு, 360 ஊராட்சிகளில், அதிக பணம் செலவிடப்பட்டுள்ளது. மேலும், 183 ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளன.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், தெரு விளக்கு பராமரிப்பு பணிகளுக்கு நான்கு ஊராட்சிகள்; குடிநீர் பணிக்கு நான்கு ஊராட்சிகள்; திடக்கழிவு மேலாண் திட்டத்திற்கு இரு ஊராட்சிகள் என, மொத்தம் 10 ஊராட்சிகள்; செங்கல்பட்டு மாவட்டத்தில், தெரு விளக்கு பராமரிப்பு பணிகளுக்கு ஆறு ஊராட்சிகள்; திடக்கழிவு மேலாண் திட்டத்திற்கு ஐந்து ஊராட்சிகள் என, மொத்தம் 11 ஊராட்சிகள் சிக்கியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில், குடிநீர் பணிக்கு நான்கு ஊராட்சிகள் என, மொத்தம் 25 ஊராட்சிகளில் முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதி இன்றி செலவழித்துள்ளனர்.
இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்தந்த கலெக்டருக்கு, ஊரக வளர்ச்சி ஆணையர் பரிந்துரைத்துள்ளார். அதிகாரிகளும் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா கூறியதாவது:
ஊராட்சிகளில் குடிநீர், தெரு விளக்கு, சுகாதாரம் ஆகிய பணிகளுக்கு அதிக நிதி செலவழித்திருந்தாலும், உரிய ஆவணங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.
உரிய ஆவணங்கள் இல்லாமல், செய்த பணிகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லை என தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
