/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழில்பூங்கா பணியாளர்களுக்கு 4 இடங்களில் தங்கும் விடுதிகள்
/
தொழில்பூங்கா பணியாளர்களுக்கு 4 இடங்களில் தங்கும் விடுதிகள்
தொழில்பூங்கா பணியாளர்களுக்கு 4 இடங்களில் தங்கும் விடுதிகள்
தொழில்பூங்கா பணியாளர்களுக்கு 4 இடங்களில் தங்கும் விடுதிகள்
ADDED : மே 29, 2024 06:26 AM
சென்னை, : தமிழக அரசின் உறைவிட நிதியத்தில் இருந்து, சென்னை அடுத்த சிறுசேரியில் உள்ள, 'சிப்காட்' தொழில் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, 800 படுக்கை வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி கட்டும் பணி துவங்கியுள்ளது. காஞ்சிபுரம், இருங்காட்டுக்கோட்டை உட்பட நான்கு இடங்களில் தங்கும் விடுதி கட்டுவதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.
மாநிலம் முழுதும் உள்ள சிப்காட் நிறுவனத்தின், 28 தொழில் பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில், 7.50 லட்சத்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.
பலர் சொந்த ஊரை விட்டு வந்து, அறை வாடகைக்கு எடுத்து அதிகம் செலவிடுகின்றனர்.
எனவே, தொழில் பூங்கா வளாகத்திலேயே ஆண், பெண் பணியாளர்களுக்கு தனித்தனியே தங்கும் விடுதிகள் கட்டி தருவதற்கு, உள்கட்டமைப்பு நிதி நிறுவனமும், சிப்காட்டும் இணைந்து, தமிழக தொழிலாளர் குடியிருப்பு நிறுவனம் என்ற சிறப்பு முகமையை ஏற்படுத்தியுள்ளன.
அதன் வாயிலாக, சென்னை அடுத்த சிறுசேரி சிப்காட் தொழில் பூங்காவில், 807 படுக்கைகள் உடன் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி கட்டும் பணி தற்போது துவங்கியுள்ளது.
ஒன்று, இரண்டு, நான்கு படுக்கை வசதிகளுடன் தங்குமிடம் அமைக்கப்படுகிறது. ஒரு படுக்கை வசதி கட்டுமானத்திற்கு சராசரியாக, 5 லட்சம் ரூபாய் செலவாகிறது.
இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருங்காட்டுக்கோட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் சூளகிரி ஆகிய சிப்காட் தொழில் பூங்காக்களிலும் பணிபுரியும் பணியாளர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.