/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சொர்ணவாரி பட்டத்திற்கான நெல் அறுவடை பணி தீவிரம்
/
சொர்ணவாரி பட்டத்திற்கான நெல் அறுவடை பணி தீவிரம்
ADDED : ஆக 05, 2024 02:04 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில் நடப்பாண்டு நவரைப் பருவத்திற்கு 27,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். நவரைப் பருவத்திற்கு சாகுபடி செய்த நெல் பயிர் அறுவடையை தொடர்ந்து, கடந்த மே மாதம் முதல், சொர்ணவாரி பட்டத்திற்கான சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உத்திரமேரூர் வட்டாரத்தில் கோடையிலும் பெரும்பாலான ஏரிகளில் நீர் இருப்பு உள்ளதாலும், விவசாய கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் உள்ளதாலும், சொர்ணவாரி பட்டத்திற்கு, நடப்பாண்டுக்கு ஏப்ரல் மாத இறுதி வரையிலான வேளாண் கணக்கில் 8,800 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு சொர்ணவாரி பட்டத்திற்கு 7,500 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 1,300 ஏக்கர் நிலப்பரப்பு கூடுதலாக சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது கதிர் முற்றிய நிலையிலான நெற்பயிர்களை பல பகுதிகளில் விவசாயிகள், அறுவடை செய்ய துவங்கி உள்ளனர்.
சொர்ணவாரி பட்டத்திற்கு அறுவடை செய்யும் நெல்லை விற்பனை செய்ய விரைவில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்த வேண்டும் என, உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.