/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
5 தாலுகாக்களிலும் ஜமாபந்தி முகாம்
/
5 தாலுகாக்களிலும் ஜமாபந்தி முகாம்
ADDED : ஜூன் 15, 2024 12:15 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நடத்தப்படும். ஒவ்வொரு தாலுகாவிலும், துணை கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஆகியோரது தலைமையில், இந்த வருவாய் தீர்வாயம் நடைபெறும்.
கடந்த மே மாதம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், இம்மாதம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களிலும் நேற்று துவங்கிய ஜமாபந்தி முகாம், வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.
l வாலாஜாபாத் தாலுகாவில், வருவாய் தீர்வாய அலுவலரான, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று ஜமாபந்தி முகாம் நடந்தது. வருவாய் துறை சம்பந்தமான மனுக்களை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்க, வருவாய் துறையினருக்கு அறிவுறுத்தினார்.
நேற்றைய முகாமில், தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 3 பயனாளிகளுக்கும், வேண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், பட்டா மாறுதல் சான்றிதழ்களை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் சதீஷ், தி.மு.க.,- - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - -எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.
l தென்னேரி குறுவட்டம் சார்ந்த 8 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்கள், குடும்ப அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண கோரி, மனுக்கள் அளித்தனர். நிகழ்ச்சியின் உடனடி தீர்வாக காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி 4 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.
l ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், வருவாய் தீர்வாய அலுவலரான, கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில், பட்டா, பட்டா பெயர், குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட 152 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றார்.
இந்நிகழ்வில், தீயணைப்பு, வட்டார வளர்ச்சி, மின்வாரியம், வேளாண் துறை, சமூக நலன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்கவில்லை. அடுத்து நடைபெற உள்ள அனைத்து ஜமாபந்திக்கும், உயர் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என, ஆர்.டி.ஓ., சரவணக்கண்ணன் காட்டமாக தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் சுந்தரமூர்த்தி, வருவாய் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
l குன்றத்துார் தாலுக்காவில் நேற்று நடந்த ஜமாபந்தி முகாமில், 122 பேர் மனுக்கள் அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முதல் நாளான நேற்று படப்பை குறுவட்டத்திற்கான முகாம் நடந்தது. மாவட்ட குழு தலைவர் மனோகரன், குன்றத்துார் தாசில்தார் நாராயணன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
l காஞ்சிபுரம் தாலுகாவில் கோட்டாட்சியர் கலைவாணி, உத்திரமேரூர் தாலுகாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆகியோர், மக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.