/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
/
காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஏப் 22, 2024 04:23 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சை அரசந்தாங்கல் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர் மற்றும் விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 19ல் யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று காலை 8:00 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோபுரத்திற்கும், மூலவர் பச்சையம்மன் மற்றும் விநாயகர், முருகர், சிவன், நாகங்கள், நவக்கிரஹம், ஆஞ்சநேயர், ரேணுகாம்பாள், விஷ்ணு துர்க்கை அம்மன், வாழ்முனி, செம்முனை உள்ளிட்ட பரிவாரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தாமல் தாமோதர பெருமாள்
காஞ்சிபுரம் ஒன்றியம், தாமல் கிராமத்தில் திருமாலழகி நாயகி சமேத தாமோதர பெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 19ம் தேதி, மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 5:00 மணிக்கு விஸ்வரூபமும், தொடர்ந்து கும்ப புறப்பாடு நடந்தது.
காலை 10:30 மணிக்கு கோவில் விமான கோபுர கலசத்திற்கும், பெருமாளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. மாலை 3:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 5:30 மணிக்கு பெருமாள் திருவீதி புறப்பாடு நடந்தது.
வெள்ளைகேட் ராஜகுபேரர்
காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகில் உள்ள குபேரபட்டினத்தில் ராஜகுபேரர் கோவிவில் மூலவராக சிவபெருமானுடன் கூடிய ராஜகுபேரர் மற்றும் பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், அகத்தியர் மற்றும் திரியாம்பிகை நாதர் மங்கள பீடம் சன்னிதிகளும் புதியதாக கட்டப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று, காலை 8.40 மணிக்கு கோவில் நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சுவாமிகள் ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.
தொடர்ந்து, மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் கும்பாபிஷேகம் நடந்தது.
கன்னியம்மன் கோவில்
பெரிய காஞ்சிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள கன்னியம்மன் கோவிலில் புதிதாக சப்த கன்னியம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதியினர், திருப்பணிக் குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, புதிதாக சப்த கன்னியர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று, காலை 9:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும், தொடர்ந்து மஹாதீப ஆராதனை நடந்தது.
உத்திரமேரூர் நுாக்கலம்மன்
உத்திரமேரூர், எல்.எண்டத்துார் சாலையில் நுாக்கலம்மன் கோவிலில் மூன்று நிலைகளுடன் புதிதாக ராஜகோபுரம், 27 நட்சத்திரங்கள் மற்றும் நவக்கிரஹ ராசி மண்டலம் அமைத்து பல்வேறு திருப்பணி செய்யப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 19ம் தேதி காலை மஹா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு ராஜகோபுர கும்பாபிஷேகமும், 10:00 மணிக்கு நுாக்கலம்மனுக்கு மஹா கும்பாபிஷேகமும், தொடர்ந்து சீர்வரிசையுடன் மஹா அபிஷேகம், திருமாங்கல்ய தாரணம், அன்னதானம் நடந்தது.

