/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
/
விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூலை 12, 2024 09:05 PM

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில், செல்வ விநாயகர், சிவ விஷ்ணு கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த சி.என்.ஏ., மற்றும் சி.எஸ்.செட்டி குறுக்கு தெருவினர் முடிவு செய்தனர்.
அதன்படி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 10ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசம் புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து, கோவில் கோபுர விமான கலசத்திற்கும், மூலவருக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் நாராயணபாளையம் தெருவில், நவசக்தி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 10ம் தேதி, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று, காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடும், தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. காலை 9:30 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:30 மணிக்கு நவசக்தி செல்வ விநாயகர் வீதியுலாவும், மஹாதீபாராதனையும் நடந்தது.
மாரியம்மன் கோவில்
உத்திரமேரூர் பஜார் வீதியில், பேருந்து நிலையம் எதிரே நடுத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். 10வது நாள் விழாவின்போது, உத்திரமேரூர் சுற்றிவட்டார கிராமங்களில் அம்மன் வீதி உலா விமரிசையாக நடக்கும். சிறிய அளவிலான இக்கோவிலை விரிவுபடுத்தி கட்டமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கற்றளி என்னும் கருங்கற்களால் புதிய வடிவில் கோவில் கட்டப்பட்டு திருப்பணிகள் முடிந்தன.
இதையடுத்து நேற்று மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, காலை 8:30 மணிக்கு கலசம் புறப்பாடும், 9:00 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகமும், மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.