குறைந்த மின்னழுத்த பிரச்னை லிங்காபுரம் மக்கள் அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னை லிங்காபுரம் மக்கள் அவதி
ADDED : ஜூன் 25, 2026 03:42 PM
வாலாஜாபாத், ஜூன் 26–
லிங்காபுரம் கிராமத்தில் ஓராண்டாக நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னையால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சிக்கு உட்பட்ட லிங்காபுரம் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். லிங்காபுரம் பகுதிக்கு வாலாஜாபாத் மின் பகிர்வு மையம் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஓராண்டாக இப்பகுதியில் வீடுகளுக்கான மின் விநியோகத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னை நிலவுகிறது.
இதனால், இரவு நேரங்களில் டியூப் லைட் ஒளிராமலும், மின்விசிறி வேகமற்று சுழலுதல் மற்றும் ‘டிவி, ஏசி’ குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் 80 வீடுகள் இருந்த போது, 1 மின்மாற்றி வைக்கப்பட்டது. ஆனால், இப்போது 150 வீடுகளுக்கு மேல் ஆகியுள்ளது.
எனவே, இப்பகுதியில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காண மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
