ADDED : மே 07, 2024 04:05 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் எஸ்.வி.என்., தெருவில் இருந்து, பிள்ளையார்பாளையம் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள ஒ.பி.,குளம் உள்ளது. 2011ல், அண்ணா நுாற்றாண்டு விழாவையொட்டி 2.58 கோடி ரூபாய் செலவில் பொழுது போக்கு பூங்காவாக அமைக்கப்பட்டது.
இதில் குளத்தை சுற்றிலும் நடைபாதை, இருக்கைகள், நவீன மின் விளக்கு, குளத்தை சுற்றிலும் தடுப்பு கம்பி உள்ளிட்ட பல்வேறு வசதி ஏற்படுத்தப்பட்டன.
குளத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்கள், தினமும் காலை, மாலையில் குளக்கரை நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கவும் வந்து சென்றனர்.
ஒரு சில மாதங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால், இரவு நேரத்தில், மதுபிரியர்கள் மது அருந்தும் மையமாக பயன்படுத்தினர். இதனால், மின் விளக்குகளை மதுபிரியர்கள் உடைத்து விட்டனர். நாளடைவில் மின்கம்பங்களும், நடைபாதைக்காக பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள், இருக்கைகள் மாயமாகின.
இதனால், பொதுமக்கள் குளக்கரை பூங்கா பக்கம் வருவதை தவிர்த்து விட்டனர். குளத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் அந்த குளத்தில் விடப்பட்டதால் குளத்துநீர் மாசு அடைந்துள்ளது,
மேலும், குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளும், நடைபாதையில் குப்பை குவியல் குவிந்துள்ளதால், குளம் சீரழிந்த நிலையில் உள்ளது.
கடந்த 2011ல், 2.58 கோடி ரூபாய் ரூபாய் செலவில் சீரமைத்த குளம், 13 ஆண்டுகளில் முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்கா என்பதற்கான அடையாளமே இல்லாமல் சீரழிந்த நிலையில் உள்ளது.
எனவே, இக்குளத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.