/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'டிரோன்' வாயிலாக மருந்து வினியோகம் நந்திவரத்தில் மீண்டும் சோதனை ஓட்டம்
/
'டிரோன்' வாயிலாக மருந்து வினியோகம் நந்திவரத்தில் மீண்டும் சோதனை ஓட்டம்
'டிரோன்' வாயிலாக மருந்து வினியோகம் நந்திவரத்தில் மீண்டும் சோதனை ஓட்டம்
'டிரோன்' வாயிலாக மருந்து வினியோகம் நந்திவரத்தில் மீண்டும் சோதனை ஓட்டம்
ADDED : ஏப் 23, 2024 03:57 AM
கூடுவாஞ்சேரி : நந்திவரம்- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, செங்கல்பட்டில் உள்ள மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, டிரோன் கேமரா வாயிலாக மருந்துகளை எடுத்துக் கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்ட முயற்சி, ஏற்கனவே வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், நேற்று இரண்டாம் கட்டமாக மீண்டும் சோதனை ஓட்டம் நடந்தது.
இது குறித்து, நந்திவரம் அரசு மருத்துவமனை வட்டார மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கூறியதாவது:
மத்திய அரசு திட்டத்தின் கீழ், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு, மிக வேகமாக மருந்து பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், அவசர சிகிச்சைகளுக்கு தேவையான இரத்த வகைகள், உடல் உறுப்புகளை கொண்டு செல்லவும், டிரோன் கேமரா பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதற்கான சோதனை ஓட்டம், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வெற்றி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில், நந்திவரம் அரசு மருத்துவமனையில், முதல் முறையாக, கடந்த மாதம் 8ம் தேதி சோதனை ஓட்டம் நடந்தது. தொடர்ந்து, நேற்று இரண்டாம் கட்டமாக நடைபெற்ற சோதனை ஓட்டமும் வெற்றி அடைந்தது.
நேற்று காலை 11:00 மணி அளவில், செங்கல்பட்டு மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, மருந்துகளுடன் டிரோன் கேமரா புறப்பட்டு, நந்திவரம் அரசு மருத்துவமனைக்கு, காலை 11:24 மணிக்கு வந்து சேர்ந்தது.
அதில் கொண்டு வந்த ஊசிகள், மருந்து, மாத்திரைகளை பெற்றுக்கொண்டு, பேட்டரிகள் மாற்றப்பட்ட டிரோன் கேமரா மீண்டும் மருந்து பொருட்களுடன் செங்கல்பட்டுக்கு 11:45 மணிக்கு அனுப்பப்பட்டது.
அது, சரியாக 12:10க்கு மணிக்கு செங்கல்பட்டு சென்றடைந்தது. டிரோன் கேமராவின் தற்போதைய பயண நேரம், 25 நிமிடமாக உள்ளது.
இதையடுத்து, 10 நிமிடம் முதல் 15 நிமிடத்திற்குள் சென்று திரும்பும் வகையில், மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
இந்த டிரோன் கேமரா, நான்கு அடி அகலம், மூன்றடி நீளத்தில் உள்ளது. இதன் மொத்த எடை ஏழரை கிலோ. இதில், அதிகபட்சமாக 50 கிலோ வரை கொண்டு செல்ல முடியும்.
நேற்று, செங்கல்பட்டு கொளவாய் ஏரி வழியாக கிளம்பிய டிரோன், சாலை மார்க்கமாக 200 அடி உயரத்தில் பறந்து, வெற்றிகரமாக நந்திவரத்தில் தரையிறங்கியது.
இவ்வாறு அவர் கூறினார்.

