/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டு எண்ணும் நாள் வரை கூட்டங்கள் ரத்து!
/
ஓட்டு எண்ணும் நாள் வரை கூட்டங்கள் ரத்து!
ADDED : ஏப் 23, 2024 03:49 AM
காஞ்சிபுரம் : லோக்சபா தேர்தல் தமிழகம் முழுதும், கடந்த 19ம் தேதி நடைபெற்றது. காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், 1,932 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது.
இதையடுத்து, ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன.
ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதுவரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேனர் வைப்பது, கட்சி சார்ந்த பொதுக்கூட்டம் என, அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக, கலெக்டர் தலைமையில் நடைபெறும் குறைதீர் கூட்டங்கள், ஓட்டு எண்ணும் நாள் வரை நடைபெறாது என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாரந்தோறும் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. தேர்தல் அறிவித்தது முதலே, குறைதீர் கூட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இந்த நடைமுறை ஜூன் 4ம் தேதி வரை தொடரும்.
அதாவது, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், நுகர்வோர் குறைதீர் கூட்டம், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், பொது வினியோக குறைதீர் கூட்டம் ஆகியவை ஓட்டு எண்ணிக்கை நாள் வரை நடைபெறாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

