/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இயற்கை எரிவாயு கசிவு மணலி புதுநகரில் பீதி
/
இயற்கை எரிவாயு கசிவு மணலி புதுநகரில் பீதி
ADDED : செப் 07, 2024 07:05 AM
மணலிபுதுநகர் : சென்னை, மணலி புதுநகர் அடுத்த கொண்டக்கரையில், தனியாருக்குச் சொந்தமான இயற்கை எரிவாயு மையம் உள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு வினியோகம் செய்வதற்காக, குழாய் வாயிலாக வெள்ளிவாயல் சாவடி, கடப்பாக்கம், வடபெரும்பாக்கம், மாதவரம் வழியாக மீனம்பாக்கம் வரை எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் வெள்ளிவாயில் சாவடி அருகே, கொசஸ்தலை ஆற்றின் ஓரம், இந்த எரிவாயு குழாயின் வால்வு உடைந்து, வாயு கசிந்துள்ளது.
பெரும் சத்தத்துடன் வாயு கசிந்ததால், அப்பகுதியில் புகை மூட்டமாகியது. இதைப் பார்த்த அப்பகுதிவாசிகள் பீதியடைந்து, மணலிபுதுநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கொண்டக்கரை இயற்கை எரிவாயு தயாரிக்கும் தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து நிறுவன அதிகாரிகள், அந்த வழியாக செல்லக்கூடிய எரிவாயுவின் பிரதான குழாய் வால்வை மூடினர்.
இதனால், எரிவாயு வெளியேறுவது படிப்படியாக குறைந்தது.
இயற்கை எரிவாயு என்பதால், கண் எரிச்சல் போன்ற எந்த பாதிப்பும் இருக்காது எனக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.