/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரி ஏய்ப்பு செய்வோரை கண்டறிய மறுஆய்வு... தேவை! நடவடிக்கை இல்லாததால் பல கோடி ரூபாய் இழப்பு
/
வரி ஏய்ப்பு செய்வோரை கண்டறிய மறுஆய்வு... தேவை! நடவடிக்கை இல்லாததால் பல கோடி ரூபாய் இழப்பு
வரி ஏய்ப்பு செய்வோரை கண்டறிய மறுஆய்வு... தேவை! நடவடிக்கை இல்லாததால் பல கோடி ரூபாய் இழப்பு
வரி ஏய்ப்பு செய்வோரை கண்டறிய மறுஆய்வு... தேவை! நடவடிக்கை இல்லாததால் பல கோடி ரூபாய் இழப்பு
ADDED : மார் 01, 2025 12:12 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் என, ஏழு வகையான வரி இனங்கள் வசூலிக்கப்படுகின்றன. மாநகராட்சி முழுதும் உள்ள 51 வார்டுகளிலும், 52,000 கட்டடங்களுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் ஏழு வகையான வரி இனங்கள் வாயிலாக ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும். இதில், 20 கோடி ரூபாய்க்கு சொத்து வரியாக வசூலிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் நகரவாசிகளிடம் இருந்து 30 கோடி ரூபாய்க்கு வரி இனங்கள் வசூலிக்கப்படும் நிலையில், பல கோடி ரூபாய்க்கு வரி இனங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.
நிலுவை தொகை போதிய அளவில் வசூலிக்காததால், ஆண்டுதோறும் வருவாய் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, கட்டடங்களை ஆய்வுக்கு உட்படுத்தாததால், உரிமையாளர்கள் இஷ்டம் போல மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தி வருகின்றனர். வணிக ரீதியிலான பல கட்டடங்கள், இன்னும் குடியிருப்பு வகைப்பாட்டில் செயல்படுகின்றன.
வணிக ரீதியிலான 1,667 கட்டடங்களுக்கு, 1.23 கோடி ரூபாய்க்கு வரி கேட்பு எழுப்பப்பட்டதாகவும், குறைவான பரப்பளவிற்கு வரி விதிக்கப்பட்டிருந்த 2,379 கட்டடங்களுக்கு, உரிய பரப்பளவுப்படி வரி விதிக்கப்பட்டதால், 84 லட்சம் ரூபாய் கிடைத்ததாகவும், கமிஷனர் நவேந்திரன் கூறியிருந்தார்.
மேலும், வரி விதிக்கப்படாமல் இருந்த 695 கட்டடங்களுக்கு புதிய வரி விதிக்கப்பட்டதால், 2.1 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுத்ததாகவும், அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த நடவடிக்கைகள் போதாது என, கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி கூட்டம் நடைபெறும் போதெல்லாம், தங்களது வார்டுகளில் பல கட்டடங்களுக்கு வரி விதிக்கப்படாமல் இருப்பதாகவும், வணிக ரீதியிலான கட்டடங்கள் பல, குறைவான வரி செலுத்துவதாகவும் கவுன்சிலர்கள் புலம்புகின்றனர்.
ஆனால், போதிய நடவடிக்கை இல்லை. வரி வசூலிக்கும் பில் கலெக்டர்கள், கட்டடங்கள் மீதான ஆய்வு பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை எனவும், 'கமிஷன்' பெற்றுக்கொண்டு இஷ்டம் போல் வரி விதிப்பு செய்ததாக, கடந்த மாநகராட்சி கூட்டத்திலேயே கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.
பில் கலெக்டர்கள் பலர் லஞ்ச ஒழிப்புத் துறையால் ஏற்கனவே கண்காணிக்கப்படும் நிலையில், 'கமிஷன்' வாங்கி கொண்டு வரி ஏய்ப்பு செய்யும் பில் கலெக்டர்கள் பலரையும், மாநகராட்சி கமிஷனர் கண்டிக்க வேண்டும்.
புதிய திட்டங்களுக்கு தேவையான நிதியை சமாளிக்க, வரி இனங்களை மறு ஆய்வு செய்து, வரி நிர்ணயம் செய்ய வேண்டும் என, கருத்து எழுந்துள்ளது.