/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாகன நிறுத்தமாக மாறிய ஒரகடம் பேருந்து நிறுத்தம்
/
வாகன நிறுத்தமாக மாறிய ஒரகடம் பேருந்து நிறுத்தம்
ADDED : மார் 21, 2024 10:39 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலத்தின் கீழ், வாகனங்கள் நிறுத்துவதால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் அவதிபடுகின்றனர்.
வண்டலுார் -- வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் இடையேயான நெடுஞ்சாலையில் ஒரகடம் உள்ளது. இப்பகுதியைச் சுற்றி, 180க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பல லட்சம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
பிரதான தொழிற்சாலை பகுதியாக உள்ள, ஒரகடம் சந்திப்பில், வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலை மேம்பாலம் கீழே, ஸ்ரீபெரும்புதுார் - -சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை செல்கிறது. இவ்வழியே செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மேம்பாலத்தின் கீழ் நின்று, பயணியரை ஏற்றி செல்லும்.
இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பேருந்து நிறுத்தத்தில் தனியார் இருசக்கர வாகனங்கள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். இதனால், சாலையின் அகலம் சுருங்கி, போக்குவரத்திற்கு இடையூறாக மாறி உள்ளது.
மேலும், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் நிற்க இடமின்றி சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, ஒரகடம் போலீசார் மேம்பாலத்தின் கீழ், பேருந்து நிறுத்தத்தில் வாகனம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

