/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
3,453 பயனாளிகளுக்கு இலவச வீடு கட்ட ஆணை
/
3,453 பயனாளிகளுக்கு இலவச வீடு கட்ட ஆணை
ADDED : செப் 04, 2024 08:13 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஒன்றியங்கள் உள்ளன.
இதில், 2011ம் ஆண்டு சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. குடிசை வீடு இருக்கும் நபர்களுக்கு, வீடு கட்டுவதற்கு சில பயனாளிகளை தேர்வு செய்தனர். இதில், பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகளை கட்டியுள்ளனர்.
இதையடுத்து, ஆவாஸ் பிளஸ் திட்டத்தில், 2018ம் ஆண்டு வீடு தேவைப்படுவோருக்கு, ஊரக வளர்ச்சி துறையினர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், பசுமை வீடு வழங்கும் திட்டம் முடக்கப்பட்டு, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு, 2021ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறையினர் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
அதேபோல, 2022ம் ஆண்டு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு, புதிய குடிசை வீடுகளை கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பு வாயிலாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17,653 வீடுகள் தேவைப்படும் என, புள்ளி விபரம் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம், இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3,453 பயனாளிகளுக்கு, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டும் ஆணையை, ஊரக வளர்ச்சி துறை நிர்வாக அனுமதி அளித்து உள்ளது.
எஞ்சி இருக்கும், 14,200 நபர்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் கட்டும் திட்ட பயனாளிகளுக்கு, 3.50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், வீடு கட்டும் ஆணை நகல் வழங்கினால், கூட்டுறவு துறையில், 1 லட்ச ரூபாய் வங்கி கடனுதவி வழங்கப்படும். மேலும், மகளிர் குழுவில் உறுப்பினராக இருந்தால், 50 ரூபாய் கூடுதல் கடனுதவி வழங்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.