/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
27 அரசு அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம்.. இல்லை! வாடகை நெருக்கடியில் செயல்படும் அவலம்
/
27 அரசு அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம்.. இல்லை! வாடகை நெருக்கடியில் செயல்படும் அவலம்
27 அரசு அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம்.. இல்லை! வாடகை நெருக்கடியில் செயல்படும் அவலம்
27 அரசு அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம்.. இல்லை! வாடகை நெருக்கடியில் செயல்படும் அவலம்
ADDED : மே 23, 2024 11:09 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், சொந்த கட்டடம் இல்லாமல், 27 அரசு அலுவலகங்கள், வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. சொந்த கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்காத காரணத்தால், ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின், முக்கியமான அரசு அலுவலகங்கள், காஞ்சிபுரத்தில் உள்ள கலெக்டர் வளாகத்திலேயே செயல்படுகின்றன.
இங்கு, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம், அறநிலையத் துறை, சமூக நலத்துறை, முதன்மை கல்வி அலுவலகம், பொதுப்பணித் துறை அலுவலகம், நில அளவை, உணவுப் பாதுகாப்பு, கோட்டாட்சியர் அலுவலகம், கருவூலம் என, அரசின் முக்கியமான அலுவலகங்கள் பல அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
ஆனால், பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் இல்லாததால், இன்று வரை வாடகை கட்டடங்களிலேயே பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
விமர்சனம்
ஒவ்வொரு கட்டடங்களுக்கும், 10,000 ரூபாய் - 40,000 ரூபாய்க்கு மேலாக வாடகை செலுத்தப்படுகிறது. வாடகையாக ஆண்டுதோறும் சராசரியாக, 1 கோடி ரூபாய்க்கு மேலாக, மக்கள் வரிப்பணம் வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், 27 அரசு அலுவலகங்கள், வாடகை கட்டடங்களில் இயங்கி வருவதாக, பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசுக்கு சொந்தமான இடங்கள் பல உள்ளன.
அவற்றை சரியாக தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கினால், அரசு கட்டடம் கட்டுவதன் காரணமாக, மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் வாடகை தொகை மிச்சமாகும் என, அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்கூட்டியே இடம் தேர்வு செய்து, கட்டடம் கட்ட நடவடிக்கை எடுத்திருந்தால், வாடகையாக செலுத்தப்படும் பணத்தில், பல்வேறு புதிய கட்டடங்களை கட்டியிருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள், சொந்த கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
எதிர்பார்ப்பு
லட்சக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாக செலவிடுவதை குறைக்க, கட்டடம் கட்டுவதற்கான இடம் வழங்கும் பணிகளை, மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாடகை கட்டடத்தில் இயங்கும் அரசு அலுவலகம், தங்களுக்கு சொந்த கட்டடம் தேவை என்றால், இடம் வழங்கக்கோரி, அவர்களது இயக்குனரகம் வாயிலாக, மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பின், இடம் தேர்வு செய்யும் பணிகளை, கலெக்டர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து மேற்கொள்வர். இடம் தேர்வானதும், சம்பந்தப்பட்ட துறைக்கு அந்த இடத்தை வழங்கி, பட்டா வழங்குவர்.
அதையடுத்து, கட்டடம் கட்டுவதற்கு தேவைப்படும் மதிப்பீடு கேட்டு, பொதுப்பணித் துறைக்கு சம்பந்தப்பட்ட துறையினர் விண்ணப்பம் செய்வர். அதற்கு, மதிப்பீடு தயார் செய்து, பொதுப்பணித் துறையினர் அனுப்பிய பின், நிதி ஒதுக்கீடு செய்வர்.
இதையடுத்து, 'டெண்டர்' விடப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டி, சம்பந்தப்பட்ட துறைக்கு புதிய கட்டடத்தை ஒப்படைப்போம்.
வாடகை கட்டடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்கள் தான், இதற்கான முழு முயற்சியை எடுக்க வேண்டும்.
இடமும், நிதியும் வழங்கினால், புதிய அரசு கட்டடம் கட்டித்தர நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.