/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பினாயூர் ஏரிக்கரை புதர்கள் அகற்றி சீரமைப்பு
/
பினாயூர் ஏரிக்கரை புதர்கள் அகற்றி சீரமைப்பு
ADDED : மே 07, 2024 04:27 AM

உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூரில் 110 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை கொண்டு அப்பகுதியில் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இந்த ஏரிக்கான 2 மதகுகள் மற்றும் கலங்கல் பகுதிக்கு, விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ள அப்பகுதி விவசாயிகள் ஏரிக்கரை வழியை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.
பினாயூர் ஏரிக்கரையின் இருபுறமும் செடி மற்றும் மரங்கள் வளர்ந்து புதராக இருந்து வந்தது.
இதனால், மாட்டுவண்டி, டிராக்டர், மற்றும் டில்லர் இயந்திரம் போன்ற வாகனங்களை ஏரிக்கரை மீது இயக்க முடியாமலும் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால், பினாயூர் ஏரிக்கரையில் இருபுறமும் உள்ள தேவையற்ற புதர்களை நீக்கி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் படத்துடன் செய்தியானதையடுத்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பினாயூர் ஏரிக்கரையின் இருபுறமும் உள்ள முட்புதர்கள் மற்றும் செடி, கொடிகள் அகற்றி கரை மீது மண் கொட்டி பாதையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.