/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் பிளஸ் 1 தேர்ச்சி 0.31 சதவீதம் குறைவு மாநில அளவில் 28லிருந்து 33வது இடத்திற்கு சென்றது
/
காஞ்சியில் பிளஸ் 1 தேர்ச்சி 0.31 சதவீதம் குறைவு மாநில அளவில் 28லிருந்து 33வது இடத்திற்கு சென்றது
காஞ்சியில் பிளஸ் 1 தேர்ச்சி 0.31 சதவீதம் குறைவு மாநில அளவில் 28லிருந்து 33வது இடத்திற்கு சென்றது
காஞ்சியில் பிளஸ் 1 தேர்ச்சி 0.31 சதவீதம் குறைவு மாநில அளவில் 28லிருந்து 33வது இடத்திற்கு சென்றது
ADDED : மே 14, 2024 07:45 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,676 மாணவர்களும், 7,346 மாணவியர் என, மொத்தம் 14,022 பேர் தேர்வெழுதினர். தேர்வெழுதிய மாணவ - மாணவியரில், 12,196 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 86.98 சதவீதமாகும்.
கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 87.29 ஆக இருந்தது. நடப்பாண்டில் 0.31 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது. மாநில அளவில், 28வது இடத்திலிருந்து 33வது இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம் பின்தங்கியுள்ளது.
தேர்ச்சி பெற்றோரில், 81.32 சதவீதம் மாணவர்களும், 92.12 சதவீதம் மாணவியர் ஆவர். மாணவர்களை காட்டிலும், 10.8 சதவீதம் மாணவியர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், 81.59 ஆக பதிவாகியுள்ளது. மாநில அளவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீத அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் 31 வது தர வரிசையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு 28 வது இடத்தை பிடித்திருந்தது.
17 பள்ளிகள் 100 சதவீதம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 107 பள்ளிகள், நடப்பாண்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் பங்கேற்றன. இதில், மணிமங்கலத்தில் உள்ள மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் மெட்ரிக் பள்ளிகள் என, 16 பள்ளிகள் என, மொத்தம் 17 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
0.76 சதவீதம் உயர்வு
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், 0.76 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்திருப்பதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளிகள் 46, நகராட்சி பள்ளிகள் 3, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் 2, மாதிரி பள்ளி ஒன்று என, மொத்தம் 52 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டு, 80.83 சதவீதமாக இருந்தது. இம்முறை, 0.76 சதவீதம் கூடுதலாக பெற்று, 81.59 சதவீதம் பெற்றுள்ளது. அதாவது, தேர்வெழுதிய 7,816 மாணவ, மாணவியரில், 6,377 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சொதப்பிய 6 அரசு பள்ளிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் பங்கேற்ற 52 அரசு பள்ளிகளில், பல்வேறு அரசு பள்ளிகள், 70 - 90 சதவீதம் மேலாக தேர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், ஆறு அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் மோசமான நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.
ஆற்ப்பாக்கம் அரசு பள்ளி, 60.3 சதவீதமும், வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு பள்ளி, 40.7 சதவீதமும், படப்பை ஆண்கள் அரசு பள்ளி 47.6 சதவீதமும், சாலவாக்கம் அரசு பள்ளி 69.9 சதவீதமும், அவலுார் அரசு பள்ளி 58.7 சதவீதமும், ஸ்ரீபெரும்புதுார் ஜே.ஜே.,ஆண்கள் அரசு பள்ளி 57.8 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்திலேயே, இந்த 6 அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் மிக குறைவாக பதிவானதால், கல்வித் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

