/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடலில் சாலையோர குடியிருப்புகள் அகற்ற எதிர்ப்பு
/
திருமுக்கூடலில் சாலையோர குடியிருப்புகள் அகற்ற எதிர்ப்பு
திருமுக்கூடலில் சாலையோர குடியிருப்புகள் அகற்ற எதிர்ப்பு
திருமுக்கூடலில் சாலையோர குடியிருப்புகள் அகற்ற எதிர்ப்பு
ADDED : ஆக 22, 2024 12:48 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருமுக்கூடல் கிராமம். இக்கிராம சாலையோர புறம்போக்கு நிலத்தில், அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இதில், திருமுக்கூடல் நூலகம் அருகே சாலையோரத்தில் அடுத்தடுத்து உள்ள நான்கு வீடுகளை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக, போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு வீடுகளை இடிக்க நேற்று அதிகாரிகள் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்பு வாசிகள், தங்களது உறவினர் மற்றும் அப்பகுதி மக்களை ஒருங்கிணைத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் 40 ஆண்டுகளாக அங்கு வீடு கட்டி குடியிருப்பதாகவும், சாலை விரிவாக்க பணி போன்ற பொது தேவைக்கென இல்லாமல், தங்களது வீடுகளுக்கு பின்புறம் மனை வாங்கி, வீட்டுமனை பிரிவுகளாக்கும் தனிநபர் தேவைக்காக வீடுகளை அகற்றுவதாக குற்றஞ்சாட்டினர்.
மேலும், ஒரு வாரத்திற்கு முன் தான் தங்களுக்கு அறிவிப்பு செய்ததாகவும், போதிய கால அவகாசம் தரவில்லை எனவும் முறையிட்டனர். மேலும், காலஅவாகாசம் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உத்திரமேரூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அனந்த கல்யாணராமன், வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் பேச்சு நடத்தினர்.
அதன்பின், 'ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாகவும், சர்வே செய்தல் உள்ளிட்ட சில பணிகளை மேற்கொண்ட பின், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்' என, அவர்கள் தெரிவித்தனர்.