/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வருமானத்திற்கு அதிக சொத்துக்குவிப்பு அரசு அதிகாரி தம்பதி வீட்டில் 'ரெய்டு'
/
வருமானத்திற்கு அதிக சொத்துக்குவிப்பு அரசு அதிகாரி தம்பதி வீட்டில் 'ரெய்டு'
வருமானத்திற்கு அதிக சொத்துக்குவிப்பு அரசு அதிகாரி தம்பதி வீட்டில் 'ரெய்டு'
வருமானத்திற்கு அதிக சொத்துக்குவிப்பு அரசு அதிகாரி தம்பதி வீட்டில் 'ரெய்டு'
ADDED : ஆக 07, 2024 02:40 AM

-காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில், நகரமைப்பு பிரிவில் கட்டட ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஷியாமளா, 47. இவர், காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது கட்டட அனுமதிக்கு அதிகளவில், 'கமிஷன்' பெற்று வந்ததாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
பல ஆண்டுகளாக காஞ்சிபுரத்திலேயே இவர் பணியாற்றியதால், இவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இவர் கன்னியாகுமரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்து இடமாறுதல் பெற்று திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சியில் கட்டட ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
காஞ்சிபுரம் மண்டித் தெருவில் இவரது வீடு அமைந்துள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பணியாற்றிய போது, இவர் அதிகளவு லஞ்சம் பெறுவதாக எழுந்த புகார் காரணமாக, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இவரது சொத்து மதிப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அதில், இவர் பெயரில் மட்டுமின்றி, கணவர் சேகர், 55, என்பவர் பெயரிலும் பல்வேறு அசையா சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது தெரிந்தது.
இவரது கணவர் சேகர், மின்வாரியத்தில் சிவகாஞ்சி பிரிவு மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
வருமானத்திற்கு அதிகமாக 73.94 லட்ச ரூபாய் சொத்து சேர்த்ததாக, இருவரது பெயரிலும், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது வருமானத்திற்கு அதிகமாக 69 சதவீதமாகும்.
இந்நிலையில், ஆய்வாளர் கீதா தலைமையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று. காலை 6:00 மணியளவில், ஷியாமளா வீட்டில் திடீரென சோதனை நடத்தினர்.
காலையில் துவங்கிய சோதனை, பிற்பகல் 2:00 மணி வரை நீடித்தது. இதில், 1.37 லட்ச ரூபாய் ரொக்கமாக போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கின்றனர்.