/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாடகை காரை அடமானம் வைத்து மோசடி
/
வாடகை காரை அடமானம் வைத்து மோசடி
ADDED : ஜூலை 16, 2024 11:42 PM
திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த குப்பம்மாள் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 33. இவர் கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.
இவரை கடந்த மே 5ம் தேதி, கடலுார் மாவட்டம் அனுக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவர், 'சூம் கார்ஸ்' என்ற செயலி மூலம் தொடர்பு கொண்டு 'மாருதி எர்டிகா' காரை வாடகைக்கு எடுத்துள்ளார். அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. காரில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ்., வாயிலாக கண்காணித்த போது, கார் திருப்பூரில் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து கடந்த 2ம் தேதி திருப்பூர் சென்று பழனிசாமி என்பவரிடம் தன் கார் இருப்பதை சிலம்பரசன் கண்டுபிடித்தார். தன் காரை கொடுக்கும்படி, அவரிடம் கேட்டுள்ளார். அப்போது, அந்த காரை சிவபிரகாஷ், மூன்று லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்தது தெரியவந்தது. அடமானத் தொகையை கொடுத்தால், காரை திருப்பி தருவதாகவும், இல்லாவிட்டால் விற்றுவிடுப் போவதாகவும் பழனிசாமியும், அவரது நண்பர் ராஜ் கண்ணன் என்பவரும் மிரட்டியுள்ளனர்.
அங்கிருந்து திரும்பிய சிலம்பரசன், நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். இதன்படி, சிவபிரகாஷ், பழனிசாமி, ராஜ்கண்ணன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.