ADDED : செப் 15, 2024 02:06 AM
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் பேரூராட்சி, மெக்ளின்புரம்,புண்ணியநாதன் தெருவில், சில நாட்களுக்கு முன், பேரூராட்சி பொதுநிதியின் கீழ், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
அப்போது, அப்பகுதியில் பட்டா நிலத்தின் மீது கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதாக தனிநபர் ஒருவர் ஆட்சேபனை தெரிவித்தார்.
இதையடுத்து, கால்வாயின் ஒரு பகுதி இடித்து அகற்றம் செய்யப்பட்டது. அப்பணியின்போது, அப்பகுதியில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட குடிநீர் பைப் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்ட குடிநீர் பைப் சீரமைக்காமல் இருந்தது.
இதனால், குடிநீர் பைப் வழியாக தண்ணீர் செல்லும் நேரத்தில், நீர் கசிந்து வீணாவதோடு, மீண்டும் அதே பைப் வழியாக சேற்று தண்ணீர் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக மெக்ளின்புரம், மழைநீர் வடிகால்வாயில் நிலத்தின் கீழ், உடைப்பு ஏற்பட்ட பகுதியில் குடிநீர் பைப் சீரமைக்கப்பட்டது.