/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சி வரை நீட்டிக்க கோரிக்கை
/
பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சி வரை நீட்டிக்க கோரிக்கை
பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சி வரை நீட்டிக்க கோரிக்கை
பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சி வரை நீட்டிக்க கோரிக்கை
ADDED : மே 29, 2024 11:11 PM
காஞ்சிபுரம்:பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சிபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்க கோரி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்:
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்துாரில் அமைய உள்ளதால், சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் வழியாக நீட்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து, பரந்துார் 10 கி.மீ., துாரத்திலும், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிக்கரையில் அமைய இருக்கும் காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பரந்துார் 7 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் செங்கல்பட்டு -- அரக்கோணம் சந்திப்புக்கு இடையே உள்ள காஞ்சிபுரம் ரயில் நிலையம், தென் தமிழகத்தையும், நாட்டின் பல்வேறு பகுதியை இணைக்கும் ரயில் தடமாக திகழ்கிறது.
எனவே, பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சிபுரம் ரயில் நிலையத்துடன் இணைத்தால், பரந்துார் விமான நிலையத்தில் இருந்து, விமனா பயணியர் 5 நிமிடத்தில் காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கும், 7 நிமிடத்தில் காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு வந்து, நேரடியாக நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு செல்ல முடியும்.
மேலும், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வசிப்போர் சென்னை மற்றும் புறநகர்களுக்கு எளிதில் சென்று வர முடியும். எனவே, விமான பயணியர் மற்றும் காஞ்சிபுரம் பகுதி மக்கள் நலன் கருதி, பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சிபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்க ஆவண செய்யுமாறு எங்கள் அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.