ADDED : மே 25, 2026 09:41 PM

காஞ்சிபுரம், மே 26–
கோடை மழையால் சாலையோரம், பள்ளி வளாகங்களில் மரக்கிளைகள் முறிந்துள்ளதை வருவாய், பேரிடம் துறையினர் அகற்ற வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூர் ஊராட்சி, குருவிமலை கிராமத்தில், நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். தற்போது, கோடை விடுமுறையால், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.
இரு தினங்களுக்கு முன், சூறாவளி காற்றுடன்கூடிய மழை, காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பெய்தது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஆலங்கட்டி மழை பெய்தது.
இந்த சூறாவளி காற்றுக்கு, காஞ்சிபுரம் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மரங்கிளைகள் உடைந்து விழுந்தன. அதை பெரும்பாலான இடங்களில் அகற்றவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
குறிப்பாக, காஞ்சிபுரம் அடுத்த, குருவிமலை நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இருந்த மரக்கிளை முறிந்து, சுற்றுச்சுவர் மீது விழுந்து சேதமடைந்துள்ளது.
மேலும், காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாற்று பாலம் அருகே சாலை ஓரத்தில் உடைந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றவில்லை. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் பேரிடர் துறையினர் முறையாக ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
