ADDED : ஜூலை 16, 2024 11:36 PM
சென்னை, அக்காவுடன் நிச்சயம் முடிந்த நிலையில், அவரது 13 வயது தங்கையை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த, 12ம் தேதி பள்ளிக்கு சென்றார். மாலை வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பெற்றோர் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்னர். இதில், வாலிபர் ஒருவர் சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில், ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு அந்த சிறுமி நேற்று திடீரென வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்த போது, தன் அக்காவை நிச்சயம் செய்த ரவுடி மணிகண்டன் என்பவர், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
நேற்று ரவுடி மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.