/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா காஞ்சிபுரம் சங்கர மடத்தில் விமரிசை
/
ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா காஞ்சிபுரம் சங்கர மடத்தில் விமரிசை
ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா காஞ்சிபுரம் சங்கர மடத்தில் விமரிசை
ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா காஞ்சிபுரம் சங்கர மடத்தில் விமரிசை
ADDED : மே 10, 2024 12:46 AM

காஞ்சிபுரம், ஹைதராபாதில் உள்ள சனாதன சம்பிரதாய சங்கீத பாரதி அறக்கட்டளை சார்பில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷியாமா சாஸ்திரிகள் இசை விழா, காஞ்சிபுரம் சங்கரமடத்தில், கடந்த 2ம் தேதி துவங்கியது. ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி தினமான நேற்று, காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதைத் தொடர்ந்து, காமாட்சி அம்மன் விக்ரஹமும், ஷியாமா சாஸ்திரிகள் விக்ரஹமும் முக்கிய வீதி வழியாக மங்கல மேள வாத்தியங்களுடன் பல்லக்கில் எடுத்து வரப்பட்டு சங்கரமடம் வந்தது.
சங்கரமடத்தில் உள்ள மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனம், முன்பாக இரு விக்ரகங்களும் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
அபிஷேகம் நடந்தபோது, 300க்கும் மேற்பட்ட சங்கீத வித்வான்கள் பங்கேற்று ஷியாமா சாஸ்திரிகளின் நவரத்ன கீர்த்தனைகளை பாடினர். முன்னதாக இசைவிழாவை துவக்கி வைத்து, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:
ஒரு சொல்லை சொல்வதற்கும், மற்றொரு சொல்லை சொல்வதற்கும் இடைப்பட்ட நொடிகளை கணக்கிட்டது நம் கலாசாரம். இசையின் வாயிலாக உடல் ஆரோக்கியம் மேம்பட்டிருக்கிறது. சங்கீதத்துக்கு மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடித்திருக்கின்றனர். ஆராய்ச்சிகளும் செய்து இருக்கின்றனர்.
இசையின் வாயிலாக இறைவழிபாட்டை மேற்கொண்டிருக்கிறது, நம் இந்திய தேசம். சங்கீதத்தை கோவில்கள் மூலமாகவும் நம் முன்னோர்கள் வளர்த்திருக்கின்றனர்.
திருநெல்வேலி, மதுரை, சுசீந்திரம் கோவில்களில் உள்ள கருங்கல் துாண்களில் ஒவ்வொரு துாணும் ஒரு இசை ஒலிக்கும் வகையில் வடிவமைத்திருப்பது இதற்கு உதாரணமாகும்.
சங்கீதத்தைப் பாதுகாத்து, வளர்த்து, அதன் அவசியத்தை உணர்ந்து சங்கீத சேவையாற்ற வேண்டும். மனித நேயம் மேம்படவும், அமைதியான மனதிற்கும் சங்கீதம் அவசியமாகிறது.
எனவே பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு சங்கீதத்தை கற்றுத்தர வேண்டும். அப்போது தான் சங்கீத மும்மூர்த்திகளின் மகத்துவம் மாணவர்களுக்கு தெரிய வரும்.
மஹாபெரியவரும், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் தெருக்கூத்து, கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட பல கலையை வளர்த்தனர். காஞ்சிபுரத்தில் ஆண்டுக்கு, 365 நாட்களில் 100 நாட்களுக்கும் மேலாக பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
இவ்விழாக்களில் கர்நாடக சங்கீத இசைக் கச்சேரிகளை, கலைகளை வளர்க்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சங்கீத இசையை இசைப்பவர்களை விட கேட்பவர்கள் தான் அதிகமாக சந்தோஷப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவிற்கான ஏற்பாட்டை அறக்கட்டளை தலைவர் சீனிவாச கோபாலன், இணைச் செயலர் காஞ்சி.தியாகராஜன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.