/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பட்டு சேலைக்கு பதிலாக பேன்சி சேலைகள் ரசனை மாற்றத்தால் பட்டு வியாபாரம் பாதிப்பு
/
பட்டு சேலைக்கு பதிலாக பேன்சி சேலைகள் ரசனை மாற்றத்தால் பட்டு வியாபாரம் பாதிப்பு
பட்டு சேலைக்கு பதிலாக பேன்சி சேலைகள் ரசனை மாற்றத்தால் பட்டு வியாபாரம் பாதிப்பு
பட்டு சேலைக்கு பதிலாக பேன்சி சேலைகள் ரசனை மாற்றத்தால் பட்டு வியாபாரம் பாதிப்பு
ADDED : பிப் 15, 2025 12:48 AM

காஞ்சிபுரம்:இந்தியாவின் ஜவுளித்துறையில், குறிப்பிட்ட பங்கு வகிக்கும் இடமாக காஞ்சிபுரம் உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பட்டு சேலை உற்பத்தியும், அவை விற்பனை செய்யும் இடமாக காஞ்சிபுரம் உள்ளது. மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இன்றைக்கும், நெசவு தொழிலை நம்பி இங்கு பிழைத்து வருகின்றனர்.
கூட்டுறவு கைத்தறி பட்டு சங்கங்கள் வாயிலாக, 100 கோடி ரூபாய்க்கு மேலாகவும், தனியார் கடைகள் வாயிலாக 200 கோடி ரூபாய்க்கு மேலாகவும் என, ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல், விற்பனை நடைபெறுவதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு, பல கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்படும் பட்டு சேலைகளை காட்டிலும், பட்டு இழையால் நெய்யப்படாத பேன்சி ரக சேலைகள் அதிகளவில் இங்கு விற்பனை செய்யப்படுவது, நெசவாளர்களுக்கு தொழில் நலிவை தெடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
அதேசமயம், சேலை எடுக்க வரும் வெளியூர்வாசிகளும், துாய பட்டு சேலையின் வடிவமைப்பு, வண்ணங்களை காட்டிலும், பளபளக்கும் பிற வகையான வெளியூர் சேலைகளை விரும்புகின்றனர். இதனால், துாய பட்டு இழைகளால் நெய்யப்பட்ட, உண்மையான பட்டு சேலை விற்பனை பாதிக்கிறது. வெளியூர் சேலைகளும், பேன்சி ரக சேலைகளும் இன்றைய தலைமுறைக்கு பிடித்திருப்பதால், கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம், தனியார் கடைகளுக்கு கிடைக்கிறது. துாய பட்டு சேலைகளை மட்டுமே விற்பனை செய்யும், கைத்தறி கூட்டுறவு சங்கங்கள், இந்த விவகாரத்தில் கடுமையாக பாதிக்கின்றனர்.
இதுகுறித்து, கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கூறியதாவது :
இன்றைய தலைமுறையினருக்கு, சுத்தமான பட்டு சேலைகளின் வடிவமைப்பு பிடிக்கவில்லை என நன்றாக தெரிகிறது.
இருப்பினும் கைகளால் நெய்யப்படும் சேலை அவ்வாறு தான் இருக்கும். கிராமப்புற வாடிக்கையாளர்கள், நாங்கள் நெய்யும் பட்டு சேலைகளை விரும்பி இன்றைக்கும் வாங்கி செல்கின்றனர்.
அதுபோன்ற வாடிக்கையாளர்களால் தான், எங்கள் பிழைப்பு ஓடுகிறது. பட்டு சேலைக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் என்ற பெருமையை வைத்தே, தனியார் கடைகள், பேன்சி ரக சேலைகளை விற்பனை சக்கை போடு போடுகிறது.
இதனால், பல கோடி ரூபாய் பட்டு சேலை வியாபாரம் சரிகிறது. சாதாரண இந்த சேலைகளுக்கு, சாப்ட் சில்க், காட்டன் சில்க், ஸ்மூத் சில்க் என வியாபாரிகளே இஷ்டத்துக்கு பெயர் வைத்து அழைக்கின்றனர். வெளியூர் வாடிக்கையாளர்கள், இந்த சேலைகள் அனைத்து பட்டு இழையால் நெய்யப்பட்டவை என நம்பி வாங்கி செல்கின்றனர்.
சில கடைகள், ஆரணி, கும்பகோணம் பகுதியில் உற்பத்தியாகும் சேலைகளை கூட விற்கின்றனர். பேன்சி ரக சேலைகள் விலை, 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை இருப்பதால், பலரும் வாங்கிச் செல்கின்றனர். வசதி படைத்தோர், 5 லட்ச ரூபாய் முதல், 10 லட்ச ரூபாய் வரைக்கும் கூட சேலைகளை வாங்குகின்றனர். உண்மையான பட்டு சேலைகளின் மதிப்பு பலருக்கும் தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

