/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடல் பாலம் மீது மண் படிந்து தேக்கம்
/
திருமுக்கூடல் பாலம் மீது மண் படிந்து தேக்கம்
ADDED : ஜூன் 21, 2024 02:04 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல்- பழையசீவரம் பாலாற்றின் இணைப்பாக, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பாலம் உள்ளது.
திருமுக்கூடல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர், இந்த பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்கள் மூலம், வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒரகடம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
திருமுக்கூடல் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து, ஜல்லிகற்கள் மற்றும் எம்.சாண்ட் ஏற்றி செல்லும் லோடு லாரிகள் திருமுக்கூடல் பாலத்தின் வழியாக பல பகுதிகளுக்கு செல்கின்றன.
இந்த லாரிகளில் இருந்து பறக்கும் மண்புழுதி மற்றும் லாரி சக்கரங்களில் படிந்த மண், பாலத்தின் ஓரங்களில் தேங்கி கிடக்கிறது.
இவை காற்றில் புழுதியாக பறந்து இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்ப்பதோடு, மழை நேரங்களில் பாலத்தின் மீது தேங்கும் தண்ணீர் சாலையோரம் வடிந்து செல்ல தடையாக உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, திருமுக்கூடல் பாலத்தின் மீது சாலையோரம் குவிந்துள்ள மணலை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.