/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிங்கபெருமாள் கோவில் குளம் சீரமைப்பு பணி தீவிரம்
/
சிங்கபெருமாள் கோவில் குளம் சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : ஆக 04, 2024 01:23 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அழகிய சிங்கபெருமாள் கோவிலுக்கு, தினமும் உள்ளூர், வெளியூர் என, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு வெளியே உள்ள தெப்பக்குளம், 15 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டு, தெப்போற்சவம் நடந்து வந்தது.
முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் செடி, கொடிகள் புதர்போல மண்டி இருந்தது. இதன் காரணமாக, தெப்போற்சம் நடத்தப்படவில்லை.
இரு ஆண்டுகளுக்கு முன் பெய்த பலத்த மழையின்போது, குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதனால், குளக்கரை சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் குளத்திற்குள் தவறி விழாமல் இருக்க தடுப்பு அமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, குளத்தை துார்வாரி, சுற்றுச்சுவர் அமைத்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், சிங்கபெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க, தமிழக அரசு 57.20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. தற்போது, கோவில் தெப்பக்குளம் முழுமையாக துார்வாரப்பட்டு, குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.