ADDED : மே 26, 2026 04:01 PM

பலா பழ வெடிப்பை தவிர்க்க கரைசல் தயாரிப்பது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
ஆண்டிற்கு ஒரு முறை காய்க்கும் பலா; ஆண்டு முழுதும் காய்க்கும் பலா; ஆண்டிற்கு இரு முறை காய்க்கும் பலா என, பல்வேறு ரக பலா பழங்கள் உள்ளன. இதை சாகுபடி செய்யும் போது, காய் உதிர்வு, பிஞ்சு கருகல் உள்ளிட்ட நோய்கள் தாக்கும்.
அந்த வரிசையில் பலா பழத்தில் வெடிப்பு நோய் ஏற்பட்டு, பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகள் நுழைந்து கருமை, அழுகல் மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் உருவாகும்.
இதுபோன்ற நோய்களால், பலா பழ மகசூல் கிடைத்தும் வருவாய் இழப்பு ஏற்படும். மேலும், சந்தையில் பலா பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இதை தவிர்க்க, பலா காய் விடும் போது ஒரு லிட்டர் தண்ணீரில், ஐந்து கிராம் கால்சியம் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு கிராம் போரக்ஸ் தெளிக்கலாம்.
மேலும், ஒரு லிட்டர் தண்ணீல், 2.5 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில், ஒரு கிராம் கார்பென்டாசிம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று கலந்து கரைசலாக தெளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
செ.சுதாஷா,
97910 15355.
