/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பால்பேட்மின்டனில் வெற்றி அண்ணா பல்கலை தகுதி
/
பால்பேட்மின்டனில் வெற்றி அண்ணா பல்கலை தகுதி
ADDED : ஜூன் 03, 2024 05:12 AM
சென்னை, : சென்னையில் நடந்துவரும், பல்கலைகள் இடையிலான அகில இந்திய பால் பேட்மின்டன் போட்டியின் காலிறுதியில் திரில் வெற்றி பெற்ற அண்ணா பல்கலை, அரையிறுதிக்குள் நுழைந்தது.
அகில இந்திய பல்கலை கூட்டமைப்பு ஆதரவுடன், ஜேப்பியார் பல்கலை சார்பில், பல்கலைகளுக்கு இடையிலான, அகில இந்திய பால் பேட்மின்டன் போட்டி, செம்மஞ்சேரியில் உள்ள அப்பல்கலை மைதானத்தில் நடக்கிறது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என, பல்வேறு மாநிலங்களிலிருந்து மொத்தம் 72 பல்கலை அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.
போட்டிகள் 'நாக் - அவுட்' முறையில் நடக்கின்றன.
இதில் அண்ணா, ஜேப்பியார், சென்னை, மங்களூரு, பாரதியார், பாரதிதாசன், ஆந்திரா, எஸ்.ஆர்.எம்., ஆகிய எட்டு பல்கலை அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
நேற்று காலை நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில், போட்டியை நடத்தும் ஜேப்பியார் பல்கலையை எதிர்த்து, அண்ணா பல்கலை களமிறங்கியது.
இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால், ஆட்டத்தின் ஒவ்வொரு வினாடியிலும் அனல் பறந்தது.
முதல் 'செட்'டை 35--27 என அண்ணா பல்கலை கைப்பற்ற, எழுச்சி கண்ட ஜேப்பியார் பல்கலை, 35--33 என அடுத்த செட்டை தனதாக்கியது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி செட்டில், இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவிக்க, கடைசி சில நிமிடங்களில் வெகுண்டெழுந்த அண்ணா பல்கலை அணி வீரர்கள், அடுத்தடுத்து புள்ளிகளைக் குவித்து 35--31 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர்.
மற்ற காலிறுதி போட்டிகளில் எஸ்.ஆர்.எம்., பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகிய பல்கலை அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.