/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கம்பன் கால்வாய் குறுக்கே பாலம் கட்டும் பணியில் சுணக்கம்
/
கம்பன் கால்வாய் குறுக்கே பாலம் கட்டும் பணியில் சுணக்கம்
கம்பன் கால்வாய் குறுக்கே பாலம் கட்டும் பணியில் சுணக்கம்
கம்பன் கால்வாய் குறுக்கே பாலம் கட்டும் பணியில் சுணக்கம்
ADDED : ஆக 18, 2024 12:04 AM

சிங்கில்பாடி:ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், தைப்பாக்கம், கூரம், பெரியகரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய், 44 கி.மீ., உடையது.
இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களின், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் மூலம், 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வடகிழக்கு பருவ மழை காலங்களில், கம்பன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நீரால், மதுமங்கலம் அடுத்த, சிங்கில்பாடி கிராமத்தினர் கடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. இதை தவிர்க்க, பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், 4.28 கோடி ரூபாய் நபார்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டன.
பாலம் கட்டுவதற்கு, ஒராண்டு கால அவகாசம் முடிவு பெறும் தருவாயில், 50 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவு பெற்று உள்ளன. மீதம், 50 சதவீத பணிகள் விறுவிறுப்பின்றி நடந்து வருகின்றன.
இந்த வடகிழக்கு பருவ மழைக்கு, கம்பன் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது, மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் சூழல் தான் உருவாகி உள்ளது.
எனவே, சிங்கில்பாடி கிராமம் அருகே, கம்பன் கால்வாய் குறுக்கே, பாலம் கட்டும் பணி நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கட்டுமான பணிகளை, பருவ மழைக்குள் விரைந்து முடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

