/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வருவாய் துறையில் நிர்வாக குளறுபடி தீர்வு கிடைக்காமல் மனுதாரர்கள் புலம்பல்
/
வருவாய் துறையில் நிர்வாக குளறுபடி தீர்வு கிடைக்காமல் மனுதாரர்கள் புலம்பல்
வருவாய் துறையில் நிர்வாக குளறுபடி தீர்வு கிடைக்காமல் மனுதாரர்கள் புலம்பல்
வருவாய் துறையில் நிர்வாக குளறுபடி தீர்வு கிடைக்காமல் மனுதாரர்கள் புலம்பல்
ADDED : செப் 05, 2024 08:05 PM
காஞ்சிபுரம்:சென்னைக்கு மிக அருகில் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளதால், உயரதிகாரிகளின் கவனம் காஞ்சிபுரம் மாவட்டம் மீது அதிகளவில் உள்ளது.
இருப்பினும், மாவட்டத்தில் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்னைகளுக்கு இன்று வரை தீர்வு எட்டப்படாமல் உள்ளது. குறிப்பாக, வருவாய் துறையில் நடக்கும் நிர்வாக குளறுபடிகளாலும், அதிகாரிகளின் அரசியல் காரணமாகவும் மாவட்டம் முழுதும் சலசலப்பாக உள்ளது.
மேலும், மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காதது, ஆக்கிரமிப்பு அகற்றாதது, தாசில்தார் பதவி உயர்வுக்கு தீர்வு கிடைக்காதது என, மாவட்டம் முழுதும் நிர்வாக குளறுபடியாக உள்ளது.
* அரசு நில ஆக்கிரமிப்பு தொடர்பாக அளிக்கப்படும் மனுக்களுக்கு உரிய பதில் கூட வருவாய் துறையினர் அளிப்பதில்லை. நிலத்தை அளக்க கூட அதிகாரிகள் செல்ல மறுக்கின்றனர். இதனால், தாலுகா அலுவலகங்களுக்கு மனுதாரர்கள் அலைய வேண்டியுள்ளது.
* பட்டா மேல்முறையீட்டு மனுதாரர்கள் தொடர்ந்து அலைக்கழிப்புக்கு ஆளாவதால், அதிகாரிகளை சந்திப்பதை குறைத்துக் கொண்டு, அமைச்சர் குறைதீர் கூட்டத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை அதிகளவில் வழங்குகின்றனர். இருப்பினும் நடவடிக்கை இல்லை.
* கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற தாசில்தார்களின் ஆதிக்கமும், நிர்வாகத்தில் அவர்கள் முடிவு எடுப்பதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
* அரசியல்வாதிகள் பரிந்துரைக்கும் மனுக்கள் மீது வேகம் காட்டும் வருவாய் துறை அதிகாரிகள், சாமானிய மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது வேகம் காட்டுவதில்லை.
* நில எடுப்பு மோசடி வழக்குகளில் சிக்கிய பல தாசில்தார்கள் மீது துறை ரீதியான விசாரணை இன்று வரை துவங்காமல் உள்ளது. இவர்கள் மீது போலீசார் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடையே நிலவும் அரசியல் காரணமாக, சுமுகமான சூழல் இல்லை. மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை இது பாதிக்கும்.
* நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்ற அக்கறை செலுத்தாமல் உள்ளனர். மாவட்டத்தில், 600 ஏக்கருக்கு மேலாக உள்ள ஆக்கிரமிப்புகள் அப்படியே உள்ளன.
* துணை தாசில்தார்கள் 40க்கும் மேற்பட்டோருக்கு பதவி உயர்வு கிடைக்காமல், பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தாலும், பதவி உயர்வுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என, புலம்பி வருகின்றனர்.
மேலும், தாசில்தார் பணியிடங்கள் அதிகமாகி வருவதால், வெளி மாவட்ட தாசில்தார்களை பணிக்கு அமர்த்த வேண்டிய சூழல் நிலவுகிறது.