/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீத்தாவரம் இருளர்களுக்கு தொகுப்பு வீடு கட்டும் பணி தீவிரம்
/
சீத்தாவரம் இருளர்களுக்கு தொகுப்பு வீடு கட்டும் பணி தீவிரம்
சீத்தாவரம் இருளர்களுக்கு தொகுப்பு வீடு கட்டும் பணி தீவிரம்
சீத்தாவரம் இருளர்களுக்கு தொகுப்பு வீடு கட்டும் பணி தீவிரம்
ADDED : மே 14, 2024 06:26 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சீத்தாவரம் கிராமம். இக்கிராமத்தில், 20 இருளர் குடும்பத்தினர், பல ஆண்டுகளாக குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள், குடியிருக்கும் பகுதி நீர்நிலை புறம்போக்கு என்பதால் மனை பட்டா பெற முடியாத நிலை உள்ளது.
வீட்டு மனை பட்டா இல்லாததால், அரசு சார்பிலான இலவச தொகுப்பு வீடுகள் பெற இயலாமல் இப்பகுதியினர் அவதிப்பட்டு வந்தனர். இதனால், காற்று மழை நேரங்களில், குடிசை வீடுகள் சேதமாகி தவிக்கின்றனர்.
எனவே, தங்களுக்கு மனைபட்டா வழங்கி இலவச வீடுகள் கட்டி தர பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் அவ்வப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, உத்திரமேரூர் ஒன்றியத்தில் மனைப்பட்டா இல்லாத இருளர் குடும்பங்களுக்கு, மலையாங்குளம் பகுதியில் பட்டா வழங்கி, அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டித்தரப்பட்டன.
ஆனால், அங்கே செல்ல சீத்தாவரம் இருளர்கள் விரும்பவில்லை. இதனால், பழவேரி ஊராட்சிக்கு உட்பட்ட அரசு காலி மனையில் சீத்தாவரம் இருளர் குடும்பத்தினருக்கு மனைபட்டா வழங்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, அப்பகுதியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ஒரு வீட்டுக்கு 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வீதம், 20 வீடுகளுக்கு ஒரு கோடியே ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டுமான பணி தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

