/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழையால் பல ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு உத்திரமேரூர் விவசாயிகள் சோகம்
/
மழையால் பல ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு உத்திரமேரூர் விவசாயிகள் சோகம்
மழையால் பல ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு உத்திரமேரூர் விவசாயிகள் சோகம்
மழையால் பல ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு உத்திரமேரூர் விவசாயிகள் சோகம்
ADDED : ஜூலை 27, 2024 12:26 AM

உத்திரமேரூர்,:
உத்திரமேரூர் வட்டாரத்தில் மொத்த நிலப்பரப்பில், 70 சதவீதம் விவசாய நிலங்களை உள்ளடக்கியது. இங்குள்ள விவசாயிகள் ஏரி பாசனம், கிணற்று பாசனம், ஆற்றுப் பாசனம் மூலம் நவரை, சம்பா, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும் பெரும்பாலும் நெல் பயிரிடுவது வழக்கம.
உத்திரமேரூர் வட்டாரத்தில், கடந்த நவரை பட்டத்திற்கு 27,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, சொர்ணவாரி பருவத்திற்கு, கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரை, 8,800 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது, நெற்பயிரில் கதிர் வந்த நிலையில், ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில், மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், உத்திரமேரூர் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நிலங்களில் சாய்ந்து சேதமாகி உள்ளது.
அரும்புலியூர், சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி, களியப்பேட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால், வயலில் சாய்ந்துள்ள நெற்கதிர்கள், நிலங்களில் உதிர்ந்து விடும் நிலை உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அரும்புலியூர் விவசாயிகள் கூறியதாவது:
சொர்ணவாரி பட்டத்திற்கு கடந்த மே மாத துவக்கத்தில், ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் நடவு செய்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. திடீரென பெய்த கனமழையால் பயிர்கள் முழுவதுமாக நிலத்தில் சாய்ந்துள்ளது.
இதனால், நெற்பயிர்களை அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், சுற்றுவட்டார பகுதிகளில் 250 ஏக்கர் வரையிலான நெற்பயிர்கள் பாதித்துள்ளது.
எனவே, வேளாண்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், மழையால் சேதமான நெற்பயிர்கள் குறித்து கணக்கீடு செய்து, பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.