/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஹம்ஸ வாகனத்தில் வரதர் உலா இன்று கருடசேவை உற்சவம்
/
ஹம்ஸ வாகனத்தில் வரதர் உலா இன்று கருடசேவை உற்சவம்
ADDED : மே 22, 2024 06:05 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதில், காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறார். அதன்படி முதல் நாள் உற்சவமான நேற்றுமுன்தினம் காலை, ஸ்ரீதேவி, பூதேவியருடன் தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி உலா வந்தார்.
இரண்டாம் நாள் உற்சவமான நேற்று காலை, ஹம்ஸ வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் எழுந்தருளி வரதராஜர் வீதியுலா வந்தார்.
மூன்றாம் நாள் பிரபல உற்சவமான இன்று காலை, கருடசேவை உற்சவம் நடக்கிறது. இதில், அதிகாலை 4:00 மணிக்கு கோபுர தரிசனமும், மாலை ஹனுமந்த வாகன உற்சவம் நடக்கிறது.
ஏழாம் நாள் பிரபல உற்சவமான வரும் 26ம் தேதி காலை தேரோட்டமும், 28ம் தேதி அனந்தசரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.
இன்று நடைபெறும் கருடசேவை உற்சவத்திற்கு, 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாமி வீதியுலா செல்லும்போது, விபத்து ஏற்படாமல் இருக்க, தற்காலிகமாக மின் இணைப்பு துண்டிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களை பரிசோதனை செய்ய உணவு பாதுகாப்பு துறையும், விபத்து ஏற்படாமல் இருக்க தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் களத்தில் பணியில் இருப்பர்.
இதுமட்டுமல்லாமல், எஸ்.பி., சண்முகம் தலைமையில், 1,500 போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

