/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு
/
உத்திரமேரூர் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : ஜூன் 25, 2024 06:22 AM
உத்திரமேரூர், : உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. 40,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, வெங்கச்சேரி செய்யாற்றில் நான்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து நிலத்திற்கடியில் குழாய் பதித்து, உத்திரமேரூரில் உள்ள ஏழு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி அதன் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
மேலும், உத்திரமேரூர் ஏரியில் திறந்தவெளி கிணறுகள், தாமரை குளக்கரையில் சுத்தகரிப்பு நிலையம் அமைத்து, அதன் மூலமாகவும் உத்திரமேரூர் பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்வதில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது.
இதுகுறித்து, உத்திரமேரூர் பேரூராட்சியினர் கூறியதாவது:
ஒரு மாதமாக, வாரத்திற்கு ஒரு முறை என சுழற்சி அடிப்படையில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. சில பகுதிகளில் 10 நாளைக்கு ஒரு முறை என குடிநீர் வழங்கப்படுகிறது.
இதனால், கடைகளில் தொடர்ந்து கேன் குடிநீர் வாங்கி உபயோகிக்கிறோம். முறையாக குடிநீர் வினியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:
உத்திரமேரூரில் 'அம்ருத்' திட்டத்தின் கீழ், குடிநீர் திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதற்காக புதிய குழாய் பதித்தல் போன்ற பணிகளிகன் போது, நிலத்தடியில் பதித்த குழாய்கள் உடைப்பு போன்ற சில பிரச்னைகளால், சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் அவ்வப்போது தடைபடுகிறது. அடுத்தடுத்த நாட்களில் சீராக குடிநீர் வினியோகிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.