ADDED : ஆக 25, 2024 11:14 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அறிவுத் திருக்கோவில், காஞ்சிபுரம் சார்பில், மனைவி நல வேட்பு தின விழா, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. மன்ற ஆலோசகரும், காஞ்சிபுரம் துணைத் தலைவருமான கண்ணப்பன் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் வெற்றிச்செல்வி முன்னிலை வகித்தார்.
சங்க ஆலோசகர் சம்பத், மேல்மருவத்தூார் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சாலிகிராமம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வி.கே.சுப்பிரமணியம் மனைவி நல வேட்பு தின விழாவின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
விழாவில், 120க்கும் மேற்பட்ட தம்பதியர் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற கணவர் ஒவ்வொருவரும், தங்களது மனைவிக்கு மலர் கொடுத்து, மென்மையான இந்த மலர் போன்ற மனம் கொண்ட நீங்கள் மனைவியாக வந்ததற்கு நான் பாக்கியம் செய்தவன். உன்னை என் வாழ்நாள் முழுதும் போற்றி பாதுகாப்பேன் என, மலர் கொடுத்தனர்.
தொடர்ந்து, மனைவி கணவருக்கு கனி கொடுத்து, இக்கனி போன்ற கனிவான மனம் படைத்த நீங்கள் எவ்வாறு கனியில் உள்ள வித்து முளைத்து மீண்டும் மலர்ந்து பூவாகி, காயாகி, கனியாவது போல் இக்குடும்பத்தில் என்னை ஏற்று மலரச் செய்து கனி போன்ற சுவை நிறைந்த வாழ்க்கை அளித்ததற்கு என கூறி, மனைவி ஒவ்வொருவரும் தங்களது கணவருக்கு கனியை அளித்தனர்.
காஞ்சிபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயலர் இளங்கோவன் வரவேற்றார். சங்க பொருளாளர் செந்தில்நாயகம் நன்றி கூறினார்.