/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாடற்ற பழைய ரேஷன் கடை அகற்றப்படுமா?
/
பயன்பாடற்ற பழைய ரேஷன் கடை அகற்றப்படுமா?
ADDED : மார் 09, 2025 03:16 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், ஒட்டன்தாங்கல் ஊராட்சியில், பூந்தண்டலம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, ரேஷன் கடை இயங்கி வந்தது. இந்த ரேஷன் கடையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், மாதந்தோறும் உணவு பொருட்களை வாங்கிவந்தனர். இந்நிலையில்,கடந்தாண்டு இந்த ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்து வந்தது.
மேலும், மழை நேரங்களில் கட்டடத்தில் மழைநீர் ஒழுகி உணவுப்பொருட்கள் நனைந்து வீணாகி வந்தன. இதனால், புதிய ரேஷன் கடை கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில், வேறொரு இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு, இரண்டு மாதத்திற்கு முன் திறக்கப்பட்டது.
தற்போது, பழைய ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்து, எந்நேரத்திலும் இடிந்து விழும் சூழல் உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் கட்டடத்தின் அருகே, அவ்வப்போது விளையாடி வருகின்றனர்.
அவ்வாறு விளையாடும்போது கட்டடம் இடிந்து விழுந்து, சிறுவர்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க, பயன்பாடற்ற பழைய ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்ற, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

