/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் மீண்டும் தலைதுாக்கிய போலி பட்டு சேலை விற்பனை: கைத்தறி துறை அதிகாரிகள் 'ரெய்டு' தொடருமா?
/
காஞ்சியில் மீண்டும் தலைதுாக்கிய போலி பட்டு சேலை விற்பனை: கைத்தறி துறை அதிகாரிகள் 'ரெய்டு' தொடருமா?
காஞ்சியில் மீண்டும் தலைதுாக்கிய போலி பட்டு சேலை விற்பனை: கைத்தறி துறை அதிகாரிகள் 'ரெய்டு' தொடருமா?
காஞ்சியில் மீண்டும் தலைதுாக்கிய போலி பட்டு சேலை விற்பனை: கைத்தறி துறை அதிகாரிகள் 'ரெய்டு' தொடருமா?
UPDATED : ஜூலை 06, 2024 06:23 AM
ADDED : ஜூலை 05, 2024 09:55 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பட்டு சேலை வாங்க வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து, தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.
அவ்வாறு வரும் வெளியூர்வாசிகளுக்கு பட்டு சேலை பற்றி தெரியாததால், வெளியூர் சேலைகளையும், விசைத்தறியில் நெய்த சேலைகளையும், பட்டு இழையால் நெய்யப்படாத சேலைகளையும், காஞ்சிபுரம் பட்டு சேலை என, மோசடியில் ஈடுபட்டு விற்பனை செய்கின்றனர்.
இதனால், நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம், பேரணி என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மோசடி செய்து விற்பனை செய்யும் கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, கடந்தாண்டு கைத்தறி கமிஷனர் விவேகானந்தன், பறக்கும் படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள முக்கியமான சில தனியார் கடைகளில் சில நாட்கள் கைத்தறி துறை அதிகாரிகள் 'ரெய்டு' நடத்தினர். அப்போது, விசைத்தறியில் நெய்த பட்டு சேலைகள் விற்பனையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வியாபாரிகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கி எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கைத்தறி துறை அதிகாரிகள், போலி பட்டு சேலைகள் பற்றி ரெய்டு நடத்துவது வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், காஞ்சிபுரம் காந்திரோடு, சேக்குப்பேட்டை சுற்றிய பகுதிகளில் போலி பட்டு சேலைகள் விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
அதிகாரிகளின் கண்காணிப்பும், ரெய்டு நடவடிக்கையும் குறைந்ததால், விசைத்தறியில் நெய்த சேலைகளை, கைத்தறியில் நெய்த சேலை எனக்கூறி, மோசடியாக விற்பனை செய்வது மேலும் அதிகரிக்கும்.
எனவே, கைத்தறி துறை அதிகாரிகள், பட்டு சேலை கடைகளில், விசைத்தறியில் நெய்த சேலைகளை விற்பனை செய்கின்றனரா எனவும், சில்க் மார்க் முத்திரையை தவறாக பயன்படுத்துகின்றனரா எனவும் ஆய்வு நடத்த, நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.